சம்பளம் வழங்கக்கோரி சேரங்கோடு தேயிலை தோட்ட அலுவலகத்தை முற்றுகையிட்ட தொழிலாளர்கள்
சம்பளம் வழங்கக்கோரி சேரங்கோடு தேயிலை தோட்ட அலுவலகத்தை தொழிலாளர்கள் முற்றுகையிட்டனர்.
பந்தலூர்,
நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா சேரங்கோடு, கொளப்பள்ளி அரசு தேயிலை தோட்டங்களில் 600–க்கும் மேற்பட்ட தோட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு மாதந்தோறும் 7–ந் தேதி சம்பளம் வழங்கப்பட்டு வந்தது. தற்போது வங்கிகள் மூலம் சம்பளம் வழங்கப்படுகிறது. ஆனால் குறிப்பிட்ட தேதிக்குள் சம்பளம் வழங்கப்படாததால் தோட்ட தொழிலாளர்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கும், குழந்தைகளின் கல்வி கட்டணம் செலுத்த முடியாமலும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து தேயிலை தோட்ட உயர் அதிகாரிகளுக்கு பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு கடந்த ஜூலை மாதத்திற்கான சம்பளம் இதுவரை வழங்கப்படவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த தொழிலாளர்கள் நேற்று காலை வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் சேரங்கோடு அரசு தேயிலை தோட்டம் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த கோட்ட மேலாளர் புஷ்பராணி, கூடலூர் எம்.எல்.ஏ. திராவிடமணி, சேரம்பாடி இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் ராஜன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தோட்ட தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
தோட்ட தொழிலாளர்களுக்கு இன்று (நேற்று) மாலைக்குள் சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதில் சமாதானம் அடைந்த தொழிலாளர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.