காலி பணியிடங்களை நிரப்பக்கோரி ஊட்டியில் அரசு ஊழியர்கள் மனித சங்கிலி போராட்டம்
காலி பணியிடங்களை நிரப்பக்கோரி ஊட்டியில் அரசு ஊழியர்கள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊட்டி,
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், அரசுத்துறைகளில் காலியாக உள்ள 4 லட்சம் பணியிடங்களை நிரப்ப வேண்டும், இளைய தலைமுறையினருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட தலைநகரங்களில் மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க நீலகிரி மாவட்டம் சார்பில், மனித சங்கிலி போராட்டம் ஊட்டி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று நடைபெற்றது. போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் ஆனந்தன் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் பார்த்திபன் மனித சங்கிலி போராட்டத்தை தொடங்கி வைத்து பேசியதாவது:–
தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் 90 லட்சம் பேர் பதிவு செய்து வேலைவாய்ப்புக்காக காத்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் அரசுத்துறைகளில் 4 லட்சம் காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. இதனால் ஒரே அதிகாரி 3 பணியிடங்களை கவனிக்க வேண்டிய நிலை உள்ளது. அரசு அறிவிக்கும் பல்வேறு திட்டங்களை அரசு ஊழியர்கள் உடனுக்குடன் மக்களுக்கு சென்றடையும் வகையில் பணிபுரிந்து வருகிறார்கள். தற்போது தமிழக அரசு பணியாளர் சீர்திருத்தம் என்ற பெயரில் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆதிசேஷயா தலைமையில் குழு ஒன்றை அமைத்து அரசுத்துறைகளில் அதிகமாக உள்ள பணியிடங்களை களைய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது இருக்கும் மக்கள்தொகைக்கு ஏற்ப அரசுத்துறையில் பணிபுரியும் அதிகாரிகள் எண்ணிக்கை போதாது. அதிகமாக நியமிக்க வேண்டிய நிலை உள்ளது.
இந்த நிலையில் தற்போது அந்த குழுவில் அரசின் 3 துறைகளில் பணிபுரியும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டு உள்ளனர். இதனால் மருத்துவமனைகளில் தனிநபருக்கு ரத்த பரிசோதனை செய்வதற்கு ஒப்பந்த அடிப்படையில் பணியிடங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. அதேபோன்று நில அளவைத்துறையில் நில அளவை கள உதவியாளர் தனியார் ஒப்பந்தத்துடன் பணி நியமனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இதனால் பதிவு செய்து காத்திருக்கும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பறிபோகும் நிலை ஏற்படுகிறது.
அரசுத்துறைகளில் தனியார் நிறுவன ஆக்கிரமிப்பு ஏற்படும் போது, அரசு மூலம் காக்க வேண்டிய முக்கிய பதிவேடுகள் போன்றவை வெளியே போக வாய்ப்பு உள்ளது. எனவே, மாநில அரசு இந்த குழுவை உடனே கலைக்க வேண்டும். முதல் கட்டமாக மாவட்ட தலைமையிடங்களில் மனித சங்கிலி போராட்டம் இன்று (நேற்று) நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து மாநில செயற்குழு முடிவின் படி, அடுத்த கட்ட போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக கோரிக்கைகளை விளக்கி மாவட்ட செயலாளர் ஆஸ்ரா பேசினார். மனித சங்கிலி போராட்டத்தில் அனைத்து துறை அரசு ஊழியர்கள் கலந்துகொண்டு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.