தமிழகத்தில் நீர்நிலைகளை பாதுகாக்க நிபுணர் குழு அமைக்க வேண்டும் - டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி
தூர்வாருவதில் அக்கறையுடன் செயல்பட்டு தமிழகத்தில் நீர்நிலைகளை பாதுகாக்க நிபுணர் குழு அமைக்க வேண்டும் என்று டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
கோவை,
கேரளாவில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பா.ஜனதா கட்சி சார்பில் கோவை அருகே உள்ள மதுக்கரை ஏ.சி.சி. காலனியில் இருந்து 20 வாகனங்களில் நிவாரண பொருட்களை அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பா.ஜனதா மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு அந்த வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதில் மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன், கோட்ட பொறுப்பாளர் ஜி.கே.செல்வகுமார், மாவட்ட தலைவர் நந்தகுமார் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக கோவை விமான நிலையத்தில் பா.ஜனதா மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:–
கேரளாவில் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் ஆகியோர் நேரில் பார்வையிட்டு தேவையான உதவிகளை வழங்கி வருகிறார்கள். மோடி தலைமையிலான மத்திய அரசு பாரபட்சம் இல்லாமல் எந்த மாநிலமாக இருந்தாலும் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது.
காவிரி ஆற்றில் 2 லட்சம் கன அடிக்கும் மேல் தண்ணீர் சென்றாலும் டெல்டா மாவட்டங்களில் உள்ள கடைமடைக்கு தண்ணீர் வர வில்லை என்று விவசாயிகள் குற்றம் சாட்டி உள்ளனர். வாய்க்கால்கள் தூர்வாரப்படாததே இதற்கு முக்கிய காரணம் ஆகும். பாசனத்துக்காக மேட்டூர் அணை திறக்கப் படுவதற்கு முன்பு டெல்டா மாவட்டங்களில் உள்ள வாய்க்கால்களை முறையாக தூர்வாரி இருந்தால், தற்போது அந்த பகுதியில் உள்ள அனைத்து நீர்நிலைகளும் நிறைந்து இருக்கும்.
சென்னையில் வெள்ளத்தால் சேதம் ஏற்பட்டதற்கு முக்கிய காரணம் ஆறுகள், குளங்கள் மற்றும் நீர் நிலைகளை ஆக்கிரமித்ததுதான். தற்போது கேரளாவில் பெய்த கனமழையால் பெரும்பாலான மாவட் டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே கேரள மழை வெள்ளத்தை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு தமிழகத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாருவதில் அக்கறையுடன் செயல்பட வேண்டும். அதற்கு எந்தெந்த துறையில் எவ்வளவு செலவு செய்யப்பட்டது என்பது குறித்து மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
மேலும் தமிழகத்தில் நீர்நிலைகளை பாதுகாக்க நீர் மேலாண்மை நிபுணர்கள் மற்றும் அதிகாரிகள் குழுவை தமிழக அரசு உடனடியாக அமைக்க வேண்டும். கோவை குனியமுத்தூர் பகுதியில் பா.ஜனதா மற்றும் இந்து முன்னணியின் கொடிக்கம்பங்களை சிலர் சேதப்படுத்தி உள்ளனர். இது தொடர்பாக போலீசார் உரிய விசாரணை நடத்தி, இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.