கோவையில் உரிம தொகை செலுத்தாத 32 தனியார் பார்களுக்கு சீல் வைப்பு

கோவையில் உரிம தொகை செலுத்தாத 32 பார்களுக்கு டாஸ்மாக் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சீல் வைத்து உள்ளனர்.

Update: 2018-08-21 22:00 GMT

கோவை,

கோவை மாவட்டத்தில் மொத்தம் 266 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. இந்த கடைகளை எளிதாக கவனிக்கும் வகையில் கோவை வடக்கு, கோவை தெற்கு என்று 2 பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளது. இதில் கோவை வடக்கு பகுதியில் 153 மதுக்கடைகளும், கோவை தெற்கு பகுதிகளில் 113 மதுக்கடைகளும் உள்ளன.

இதில் கோவை வடக்கு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகள் அருகே 76 தனியார் பார்களும், தெற்கு பகுதியில் 48 பார்களும் செயல்பட்டு வருகின்றன. இந்த பார்களின் விற்பனையின் அடிப்படையில் அந்த பார்கள் மாதந்தோறும் உரிம தொகையை அந்த மாத கடைசிக்குள் டாஸ்மாக் நிர்வாகத்துக்கு செலுத்த வேண்டும்.

இதற்கிடையே தனியார் பார்கள் கடந்த ஜூலை மாதத்துக்கான உரிம தொகையை செலுத்தவில்லை. இது தொடர்பாக டாஸ்மாக் நிர்வாகிகள் அனைத்து பார்களுக்கும் உரிம தொகையை செலுத்த வேண்டும் என்றும், அவ்வாறு செலுத்தாத பட்சத்தில் பார்களுக்கு சீல் வைக்கப்படும் என்றும் கடிதம் எழுதினார்கள். ஆனாலும் அவர்கள் அந்த தொகையை செலுத்த முன்வரவில்லை.

இதையடுத்து கோவை மாவட்ட கலால்துறை துணை ஆணையாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில் கோவை வடக்கு பகுதி டாஸ்மாக் மேலாளர் சுரேஷ், கோட்ட கலால் அதிகாரி விக்டர் மற்றும் அதிகாரிகள் தனியார் பார்களுக்கு சென்றனர். பின்னர் உரிம தொகையை செலுத்தாத பார்களுக்கு சீல் வைத்தனர். இது குறித்து டாஸ்மாக் அதிகாரிகள் கூறியதாவது:–

உரிம தொகை செலுத்தாத பார்களுக்கு அதிகாரிகள் சென்றதும் பெரும்பாலான உரிமையாளர்கள் அதற்கான தொகையை செலுத்தி விட்டனர். ஆனால் கோவை வடக்கு பகுதியில் உள்ள 32 தனியார் பார்கள் மட்டும் அதற்கான உரிம தொகையை செலுத்தவில்லை. இதையடுத்து அந்த பார்களுக்கு சீல் வைக்கப்பட்டு உள்ளது.

இன்று (புதன்கிழமை) அரசு விடுமுறை என்பதால் நாளைக்குள் (வியாழக்கிழமை) தொகையை செலுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. அதன் பின்னரும் தனியார் பார்கள் அதற்கான உரிம தொகையை செலுத்தவில்லை என்றால் அந்த பார்களின் உரிமம் ரத்து செய்யப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்