கட்டிட தொழிலாளி கழுத்தை அறுத்து கொலை

சேலத்தில் கட்டிட தொழிலாளி கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார். கல்லை கட்டி அவருடைய உடலை கிணற்றில் வீசிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2018-08-21 21:45 GMT
சூரமங்கலம், 

இந்த கொலை சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

சேலம் ஜாகீர் அம்மாபாளையம் பாரதிநகரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவருடைய மகன் உட்கண்டி என்கிற மதுசூதனன்(வயது 32). கட்டிட தொழிலாளியான இவருக்கு திருமணமாகவில்லை. இவர் தனது உறவினர் ஒருவருடன் ஒன்றாக சேர்ந்து வேலைக்கு சென்று வந்தார். மேலும் அவருடன் சேர்ந்து அடிக்கடி மது அருந்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர்கள் இருவருக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டது. இதையடுத்து முன்விரோதம் காரணமாக மதுசூதனனுக்கும், அவருக்கும் அவ்வப்போது அடிக்கடி மோதல் ஏற்பட்டது. நேற்று முன்தினம் காலை மதுசூதனன் வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டு இரவு 7 மணி அளவில் வீடு திரும்பினார்.

இதையடுத்து அவர் தனது தாயிடம் வெளியே செல்வதாக கூறிவிட்டு சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. அவரை உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இதற்கிடையில் மதுசூதனனை 2 பேர் தாக்கி மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்றதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் போலீசார் விசாரித்து வந்தனர். மேலும் பெருமாள்மலை அடிவாரம் ஓம்சக்தி நகரில் உள்ள ஒரு கிணற்றில், ஆண் ஒருவர் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் போலீசார் மற்றும் மதுசூதனனின் உறவினர்கள் அங்கு விரைந்து சென்றனர்.

அங்கு கிணற்றுக்குள் பிணமாக கிடந்தவர் மதுசூதனன் என்பது தெரியவந்தது. சம்பவ இடத்துக்கு சூரமங்கலம் தீயணைப்பு வீரர்கள் வந்து உடலை மீட்பதற்காக கிணற்றுக்குள் இறங்கினர். அப்போது மதுசூதனனின் கைகளை கயிற்றால் கட்டி, உடலில் கல் கட்டப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் அவருடைய உடலில் கயிற்றை கட்டி வெளியே மீட்டு கொண்டு வந்தனர். மதுசூதனனின் உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. போலீசார் விசாரணை நடத்தியதில், மதுசூதனனை மர்ம ஆசாமிகள் கழுத்தை அறுத்து கொலை செய்ததும், பின்னர் கல்லை கட்டி அவருடைய உடலை கிணற்றில் வீசி சென்றதும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அவருடைய உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா? அல்லது வேறு காரணம் ஏதும் உள்ளதா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்