திருட்டுத்தனமாக மது விற்ற இலங்கை அகதி உள்பட 10 பேர் கைது

கும்மிடிப்பூண்டி தாலுகாவில் திருட்டுத்தனமாக மது விற்ற இலங்கை அகதி உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2018-08-21 22:00 GMT
கும்மிடிப்பூண்டி,

கும்மிடிப்பூண்டி தாலுகாவில் உள்ள சில டாஸ்மாக் கடைகளில் அனுமதியின்றி 24 மணிநேரமும் பார்கள் இயங்கி வருவதாகவும், அதே சமயத்தில் வயல்வெளி உள்பட பல்வேறு இடங்களில் எந்த நேரமும் திருட்டுத்தனமாக மது விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் மது விலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தொடர்ந்து பல புகார் மனுக்கள் வந்தன.

இந்த நிலையில், கும்மிடிப்பூண்டி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் தலைமையில் போலீசார் கும்மிடிப்பூண்டியை அடுத்த எளாவூரில் உள்ள நவீன ஒருங்கிணைந்த சோதனைச்சாவடி அருகே ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மறைந்திருந்து 3 பேர் மது விற்று கொண்டிருந்தது தெரியவந்தது.

போலீஸ் விசாரணையில் அவர்கள், செங்குன்றம் அடுத்த பாடியநல்லூரைச்சேர்ந்த பாலகிருஷ்ணன் (வயது50), திருச்சி அடுத்த கேடுகிரிபட்டி கிராமத்தை சேர்ந்த பாரதிராஜா (24), கும்மிடிப்பூண்டி மணியக்காரத்தெருவை சேர்ந்த ராம்குமார் (34) என்பது தெரியவந்தது.

இதில் பாலகிருஷ்ணனிடம் இருந்து 28 மதுபாட்டில்களையும், பாரதிராஜாவிடம் இருந்து 27 மதுபாட்டில்களையும், ராம்குமாரிடம் இருந்து 28 மது பாட்டில்களையும், போலீசார் கைப்பற்றினர்.

அதே போல ஆரம்பாக்கம் டாஸ்மாக் கடை அருகே மது விற்பனையில் ஈடுபட்ட நொச்சிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த சுதாகரிடம் இருந்து 27 மது பாட்டில்களையும், மாநெல்லூர் வயல்வெளியில் மது விற்பனையில் ஈடுபட்ட அதே கிராமத்தை சேர்ந்த ரவிச்சந்திரனிடம்(60) இருந்து 27 மதுபாட்டில்களையும், நேமலூர் கிராமத்தில் வயல்வெளியில் மது விற்பனையில் ஈடுபட்ட ரத்தினம் (61) என்பவரிடம் இருந்து 28 மது பாட்டில்களையும், சுண்ணாம்புகுளம் எளாவூர் சந்திப்பில் மது விற்பனையில் ஈடுபட்ட ராஜேஷ் (27) என்பவரிடம் இருந்து 28 மது பாட்டில்களையும், புதுவாயல் அருகே மது விற்பனையில் ஈடுபட்ட சென்னை ராமாபுரத்தை சேர்ந்த முருகேசனிடம் (45) இருந்து 41 மது பாட்டில்களையும் போலீசார் கைப்பற்றினர்.

மேலும், கும்மிடிப்பூண்டி தாமரை ஏரி பாகுதியில் மது விற்பனையில் ஈடுபட்ட இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த யோகேஸ்வரனிடம்(34) இருந்து 24 மது பாட்டில்களையும், நெல்வாய் கிராமத்தை சேர்ந்த திருநாவுக்கரசிடம் இருந்து 28 மது பாட்டில்களையும் போலீசார் கைப்பற்றினர்.

இதனையடுத்து கும்மிடிப்பூண்டி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கண்ட 10 பேரையும் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்