ஓய்வுபெற்ற சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மனைவி மர்மசாவு

குமராட்சி அருகே ஓய்வுபெற்ற சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மனைவி பாசன வாய்க்காலில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

Update: 2018-08-21 21:45 GMT
காட்டுமன்னார்கோவில், 

குமராட்சி அருகே உள்ள தவர்த்தாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ்(வயது 58). விருத்தாசலம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு விருப்ப ஓய்வுபெற்றார். இவருக்கும், இவருடைய மனைவி உமாராணிக்கும்(47) குடும்ப தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை செல்வராஜ் சென்னையில் வசிக்கும் உமாராணியின் அண்ணன் உமாசங்கரிடம் செல்போனில் தொடர்பு கொண்டு உன் தங்கை இறந்துவிட்டாள் உடனே புறப்பட்டு வா என்று கூறினார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த உமாசங்கர் தனது உறவினர்களுடன் தவர்த்தாம்பட்டு கிராமத்துக்கு புறப்பட்டு வந்தார்.

அப்போது அதே பகுதியில் உள்ள பாசனவாய்க்காலில்உமாராணி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது பற்றி தகவல் அறிந்ததும் குமராட்சி போலீசார் விரைந்து வந்து உமாராணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையில் உமாராணியின் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது அண்ணன் உமாசங்கர் குமராட்சி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்