தமிழக அரசு குடிமராமத்து பணிகளை சரியாக செய்யவில்லை ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு

தமிழக அரசு குடிமராமத்து பணிகளை சரியாக செய்யவில்லை என்று, கொள்ளிடத்தில் ஜி.கே.வாசன் கூறினார்.

Update: 2018-08-21 23:00 GMT
கொள்ளிடம்,

கொள்ளிடம் ஆற்றில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே கொள்ளிடம் ஆற்றின் கரையோர கிராமங்களான முதலைமேடுதிட்டு, நாதல்படுகை உள்ளிட்ட கிராமங்களுக்குள் வெள்ளம் சூழ்ந்தது. அங்கு வசித்த பொதுமக்கள் பாதுகாப்பாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெள்ளம் புகுந்த முதலைமேடு திட்டு, நாதல்படுகை உள்ளிட்ட கிராமங்களை நேரில் சென்று பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார். பின்னர் அவர், அப்பகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து ஜி.கே.வாசன், நிருபர்களிடம் கூறியதாவது:-

கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோரம் வசிக்கும் கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளம் கரை புரண்டோடியும் நாகை, கடலூர், திருவாரூர், தஞ்சை, திருச்சி ஆகிய பகுதிகளில் விவசாயத்துக்கு தண்ணீர் இல்லை. டெல்டா பகுதிகளில் கூரை வீடுகளை இழந்தவர்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித்தர வேண்டும். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். பட்டுக்கோட்டை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் கடைமடை பகுதிக்கு பாசனத்திற்கு தண்ணீர் வந்து சேரவில்லை. தமிழக அரசு குடிமராமத்து பணிகளை சரியாக செய்யவில்லை என்பதற்கு இதுவே எடுத்துக்காட்டு. ஆறு, குளம், பாசன வாய்க்கால்கள் ஆகியவற்றில் தண்ணீர் வந்து சேராததற்கு பொதுப்பணித்துறையினரின் அலட்சியபோக்கே காரணமாகும். இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது த.மா.கா. மாநில செயற்குழு உறுப்பினர் சுரேஷ்மூப்பனார், மாவட்ட தலைவர் சங்கர், மாநில பொதுக்குழு உறுப்பினர் சின்னமரைக்காயர், கொள்ளிடம் வட்டார தலைவர் சுந்தரவேல், சீர்காழி நகர தலைவர் கனிவண்ணன், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் வரதராஜன் ஆகியோர் இருந்தனர். 

மேலும் செய்திகள்