கோவில்பட்டியில் பூட்டிய வீட்டில் பிணமாக கிடந்த டாக்டர் போலீசார் விசாரணை

கோவில்பட்டியில் பூட்டிய வீட்டுக்குள் உடல் அழுகிய நிலையில் டாக்டர் பிணமாக கிடந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2018-08-21 21:00 GMT

கோவில்பட்டி, 

கோவில்பட்டியில் பூட்டிய வீட்டுக்குள் உடல் அழுகிய நிலையில் டாக்டர் பிணமாக கிடந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

எலக்ட்ரோபதி டாக்டர்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ராஜீவ்நகர் 3–வது தெருவைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் ரவி (வயது 50). இவர் பி.இ.எம்.எஸ். எலக்ட்ரோபதி மருத்துவம் படித்து விட்டு, கோவில்பட்டியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளித்து வந்தார். மேலும் அவர், நோயாளிகளின் வீடுகளுக்கு சென்றும் சிகிச்சை அளித்து வந்தார்.

இவருடைய மனைவி ஸ்டெல்லா. இவர் மதுரை பசுமலையில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவர்களுடைய மகன் சாலமோன் (7), மதுரையில் உள்ள பள்ளிக்கூடத்தில் 2–ம் வகுப்பு படித்து வருகிறான். எனவே சதீஷ்குமார் ரவி மட்டும் கோவில்பட்டியில் உள்ள தனது வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

உடல் அழுகிய நிலையில் பிணம்

இந்த நிலையில் அவர் கடந்த 3 நாட்களாக தனது வீட்டில் இருந்து வெளியே வரவில்லை. நேற்று முன்தினம் மாலையில் சதீஷ்குமார் ரவியை பார்ப்பதற்காக அவருடைய நண்பரும், பிசியோதெரபிஸ்ட் நிபுணருமான கோவில்பட்டி பாரதிநகரைச் சேர்ந்த காளிராஜ் (50) வந்தார். அப்போது சதீஷ்குமார் ரவியின் வீட்டின் முன்பக்க கதவு உள்பக்கமாக பூட்டி இருந்தது. அவரது வீட்டில் இருந்து துர்நாற்றமும் வீசியது.

எனவே காளிராஜ் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தபோது, சதீஷ்குமார் ரவி உடல் அழுகிய நிலையில் கட்டிலில் இறந்து கிடந்தது தெரிய வந்தது. இதனால் அவர் அதிர்ச்சி அடைந்து இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு போலீஸ் நிலையத்துக்கும், ஸ்டெல்லாவுக்கும் தகவல் தெரிவித்தார். உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம், சப்–இன்ஸ்பெக்டர் வசந்தகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

போலீசார் விசாரணை

இறந்த சதீஷ்குமார் ரவியின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனைக்கு பின்னரே சதீஷ்குமார் ரவி உடல்நலக்குறைவால் இறந்தாரா? அல்லது வி‌ஷம் குடித்து தற்கொலை செய்தாரா? என்பது குறித்து தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் கோவில்பட்டியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்