தூத்துக்குடியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் சங்கத்தினர் கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.

Update: 2018-08-21 07:48 GMT
தூத்துக்குடி, 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் சங்கத்தினர் கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.

மக்கள் குறைதீர்க்கும் நாள்

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கி மனுக்கள் பெற்றார். உடன்குடி வட்டார விவசாயிகள் மற்றும் பசுமை ஆர்வலர்கள் நலச்சங்க தலைவர் தினகரன் தலைமையில் 40-க்கும் மேற்பட்டவர்கள் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் கூறி இருப்பதாவது;-

ஸ்டெர்லைட் ஆலை

எங்கள் பகுதி விவசாய பகுதியாகும். நாங்கள் விவசாயத்துக்கு பிரதான உரமான டி.ஏ.பி. உரத்தை பயன்படுத்தி வருகிறோம். தற்போது உரம் தட்டுப்பாடால் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து சல்பியூரிக் ஆசிட், பாஸ்பாரிக் ஆசிட் ஆகியவைகள் ஸ்பிக் நிறுவனத்துக்கு கிடைக்காததால் உரம் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதற்கு முக்கிய காரணம் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டு இருப்பது தான்.

ஸ்டெர்லைட் ஆலை எங்கள் விவசாயத்துக்கு கால்வாய் சுத்தம் செய்தல், குளம் தூர்வாருதல், வண்டல் மண் அடித்து கொடுத்தல் மற்றும் நிறைய பராமரிப்பு பணிகளை செய்து வருகிறார்கள். எங்கள் பகுதி இளைஞர்கள் பலர் ஸ்டெர்லைட் ஆலையில் வேலை செய்து வந்தனர். இப்போது அவர்களுக்கு வேலை இல்லை. எனவே எங்களுக்கு ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்பட வேண்டும். இதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறி இருந்தனர்.

ஆரம்ப சுகாதார நிலையம்

ஓட்டப்பிடாரம் தாலுகா தருவைகுளத்தை சேர்ந்த ஊர்மக்கள் செல்வகுமார், மைக்கேல் பிரசாந்த் ஆகியோர் தலைமையில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்தனர். அவர்கள் தங்கள் கோரிக்கை மனுவை மாவட்ட கலெக்டரிடம் கொடுத்தனர்.

அந்த மனுவில், எங்கள் பகுதியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவ மக்கள் வசித்து வருகிறோம். எங்கள் கிராமத்தில் தான் மாவட்டத்திலேயே அதிக அளவில் மீன்பிடிக்கும் தொழில் நடந்து வருகிறது. ஆபத்து நிறைந்த மீன்பிடி தொழிலை செய்யும் எங்களுக்கு போதிய மருத்துவ வசதி இல்லை. மருத்துவ மனைக்கு செல்ல வேண்டும் என்றால் 15 கிலோ மீட்டர் தூரத்துக்கு அப்பால் உள்ள வேப்பலோடை அல்லது தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே மீனவர்களின் நலன் கருதி எங்கள் பகுதியில் 24 மணி நேரம் இயங்கும் வகையில் ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும்.

மேலும் சீவலப்பேரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் 4 அல்லது 5 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. எங்களுக்கு தினமும் தண்ணீர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று கூறி இருந்தனர்.

தூத்துக்குடி மதசார்பற்ற ஜனதா தளம் சார்பில் மாநில துணை தலைவர் சொக்கலிங்கம் கொடுத்த மனுவில், தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் மகாத்மா காந்தியின் முழு உருவ வெண்கல சிலை உள்ளது. இந்த சிலை மற்றும் பீடம் சற்று உயரமாக இருப்பதால், மகாத்மா காந்தியின் பிறந்த நாள், சுதந்திர தினம், குடியரசு தினம் உள்ளிட்ட நாட்களில் மாலை அணிவித்து மரியாதை செலுத்த சிரமம் ஏற்படுகிறது. எனவே காந்தியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வசதியாக அங்கு ஒரு நிரந்தர படிக்கட்டு ஏணி அமைக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.

பள்ளி கட்டிடம்

ஓட்டப்பிடாரம் தாலுகா மருதன்வாழ்வு கிராமத்தை சேர்ந்த ஊர்மக்கள் கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு அடிப்படை வசதியான குடிநீர் வசதி செய்து கொடுக்க வேண்டும். பள்ளியின் கட்டிடம் சேதம் அடைந்த நிலையில் உள்ளது. அந்த கட்டிடத்தை மாணவர்கள், ஆசிரியர்கள் நலன் கருதி சீரமைக்க வேண்டும்.

மருதன்வாழ்வு ஊராட்சிக்கு உட்பட்ட அய்யப்புரம் கிராமத்தில் உள்ள குளத்தில் நடைபெறுகின்ற பாலம் மற்றும் பராமரிப்பு பணிகள் எடுத்த ஒப்பந்தகாரர்கள் தரமற்ற முறையில் பணிகளை செய்து வருகிறார்கள். இந்த பணிகளை தரமான முறையில் செய்ய மாவட்ட நிர்வாகம் ஆவனம் செய்ய வேண்டும். எங்கள் பகுதியில் இருந்து நெல்லை செல்ல காலை 7.30-க்கு பின்னர் மதியம் 1 மணி வரை எந்த பஸ்சும் இயக்கப்படவில்லை. எனவே அந்த நேரங்களில் பஸ்கள் இயக்க வேண்டும் என்று கூறி இருந்தனர்.

தூர்வார வேண்டும்...

தூத்துக்குடி கோரம்பள்ளம் 4, 5, 6, 8 மடை எண் பாசனங்கள் உறுப்பினர்கள் சார்பில் குணசேகரன் என்பவர் கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் சுமார் ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் வாழை விவசாயம் செய்து வருகிறோம். பொதுப்பணித்துறையினரின் மெத்தனத்தால் வடிகால் அழியும் தருவாயில் உள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு அப்போதைய கலெக்டரின் முயற்சியால் வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டன. அதன் பிறகு 2015-ம் ஆண்டு வெள்ளம் தாக்கி தண்ணீர் வடிய இடம் இல்லாமல் வாழைகள் வெள்ளத்தில் மூழ்கின. தற்போதும் அதே நிலை என்பதால் எங்கள் பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

எனவே எங்கள் பகுதியை உடனே ஆய்வு செய்து அரசு ஒதுக்கிய தூர்வாரும் நிதியை கொண்டு எங்கள் வடிகால் வாய்க்கால்களை தூர்வாரி தர வேண்டும் என்று கூறி இருந்தனர்.

மேலும் செய்திகள்