ஊதிய உயர்வு வழங்கக்கோரி சேலத்தில் அரசு டாக்டர்கள் தர்ணா போராட்டம்

ஊதிய உயர்வு வழங்கக்கோரி சேலத்தில் அரசு டாக்டர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்

Update: 2018-08-21 01:18 GMT
சேலம், 

மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையான ஊதியம் வழங்கக்கோரி தமிழ்நாடு அரசு டாக்டர்கள் பல்வேறு கட்டமாக போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த வாரம் ஊதிய உயர்வு கோரிக்கை அட்டையை அணிந்து பணியாற்றினர். இதே கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து அரசு டாக்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் டீன் அலுவலகம் அருகே நேற்று காலை தர்ணா போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார். இதில் கலந்து கொண்ட டாக்டர்கள் மற்றும் பயிற்சி டாக்டர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இந்த போராட்டம் சுமார் 1 மணி நேரம் வரை நடந்தது. பின்னர் டாக்டர்கள் தங்களுடைய பணிக்கு சென்றனர்.

அதைத்தொடர்ந்து மதிய நேரத்தில் ஜனநாயக தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் சார்பில் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் தர்ணா போராட்டம் நடத்தப்பட்டது. மாவட்ட தலைவர் ராஜசேகர், மாநில செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் தலைமை தாங்கினர்.

இதில் மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சங்கத்தை சேர்ந்தவர்கள் பேசினர். இதேபோல் மாவட்டத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் டாக்டர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.

மேலும் செய்திகள்