கேரளாவில் மழை : திருநங்கைகள் சார்பில் ரூ.30 ஆயிரம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் மாவட்ட நிர்வாகத்திடம் வழங்கப்பட்டது

கேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக திருநங்கைகள் சார்பில் ரூ.30 ஆயிரம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் மாவட்ட நிர்வாகத்திடம் வழங்கப்பட்டது.

Update: 2018-08-20 23:50 GMT
திருப்பூர்,

தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக கேரளாவில் உள்ள பல்வேறு மாவட்டங்களின் பல பகுதிகளில் மழைவெள்ளம் வீடுகளை சூழ்ந்துள்ளது. மேலும், பல பகுதிகளில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.

இதனால் பொதுமக்கள் பலர் தங்களது வீடுகள், உடைமைகள் உள்ளிட்டவற்றை இழந்து பல்வேறு முகாம்களில் ஆங்காங்கே தங்கவைக்கப்பட்டுள்ளனர். எனவே மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு பலரும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்கள். திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதற்கட்டமாக நேற்று முன்தினம் ரூ.50 லட்சம் மதிப்பிலான நிவாரணப்பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டன.

இந்த நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் உதவிகள் வழங்குவதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில், கலெக்டர் அலுவலகம் அருகே முகாம் அமைக்கப்பட்டுள்ளது. திருப்பூரில் 50-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் உள்ளனர். கேரள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு வழங்குவதற்காக இந்த திருநங்கைகள் திருப்பூரின் பல்வேறு பகுதிகளிலும் நிதி திரட்டினர்.

அந்த வகையில் ரூ.30 ஆயிரம் மதிப்பில் நிதி திரட்டிய திருநங்கைகள் அந்த பணத்தில் பிஸ்கெட் பாக்கெட், நாப்கின், கோதுமை மாவு, அரிசி உள்ளிட்ட நிவாரண பொருட்களை வாங்கி, கலெக்டர் அலுவலகம் அருகே அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாமில் நேற்று காலை வழங்கினர். கேரள மக்களுக்கு உதவி செய்த திருநங்கைகளை பலரும் பாராட்டினர்.

மேலும் செய்திகள்