பவானி ஆற்றில் தண்ணீர் வரத்து குறைந்ததால் மணல் கொள்ளையில் ஈடுபடும் மர்மநபர்கள்

பவானி ஆற்றில் தண்ணீர் வரத்து குறைந்ததால் மர்மநபர்கள் மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருகிறார்கள். எனவே மணல் கொள்ளையை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டு உள்ளது.

Update: 2018-08-20 23:32 GMT

பவானி,

பவானிசாகர் அணையில் இருந்து வினாடிக்கு 75 ஆயிரம் கனஅடி நீர் பவானி ஆற்றில் திறந்துவிடப்பட்டது. இதனால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும் காவிரி ஆற்றிலும் வினாடிக்கு 2 லட்சம் கனஅடிநீருக்கு மேல் வந்தது. இதனால் பவானி நகரம் திக்குமுக்காடி போனது. மேலும் ஏராளமான வீடுகள் தண்ணீர் மூழ்கின. குறிப்பாக பவானி பழையபாலம், புதியபாலத்தை தொட்டபடி தண்ணீர் சென்றது.

பவானி ஆற்றில் தற்போது தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டு உள்ளது. இதனால் பவானி ஆற்றங்கரையோர மக்கள் தங்களுடைய வீடுகளுக்கு திரும்பினார்கள். இந்தநிலையில் பவானி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் தற்போது மணல் திட்டுகள் அதிகஅளவில் காணப்படுகிறது.

இந்த மணல்கள் அனைத்தையும் விற்பனைக்காக பவானி ஆற்றின் சில பகுதிகளில் குவித்து வைக்கப்பட்டு உள்ளது. இதேபோல் மணலை விற்பனைக்காக சிமெண்டு சாக்கு மூட்டைகளில் மர்ம கும்பல் அள்ளிச்செல்கிறது.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், பவானி ஆற்றில் தண்ணீர் வரத்து குறைந்தவுடன் மீண்டும் மர்மநபர்கள் ஆற்றில் இருந்து மணலை அள்ளிச்செல்கிறார்கள். கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிகாரிகள் நடவடிக்கையின் பேரில் மணல் கொள்ளை கட்டுப்படுத்தப்பட்டது. தற்போது மீண்டும் மணல் கொள்ளை நடைபெற்று வருகிறது. இரவு, பகலாக மர்மநபர்கள் மணலை ஆற்றில் இருந்து வெட்டி எடுத்து அள்ளிச்செல்கிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மணல் கொள்ளையை தடுப்பதோடு, மணல் கொள்ளையில் ஈடுபடும் மர்மநபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளார்கள்.

மேலும் செய்திகள்