மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் சாவு
மந்தாரக்குப்பம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
மந்தாரக்குப்பம்,
மந்தாரக்குப்பம் அருகே உள்ள தொப்பிளிகுப்பத்தை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மனைவி விஜயா (வயது 50). இவர்களுடைய மகன் மணிகண்டபிரியன்(27). சம்பவத்தன்று விஜயா தனது மகன் மணிகண்டபிரியனுடன் ஒரு மோட்டார் சைக்கிளில் வீட்டில் இருந்து மந்தாரக்குப்பம் கடைவீதிக்கு சென்று கொண்டிருந்தார். வடக்குவெள்ளூர் ரெயில்வே கேட் அருகே சென்ற போது, சாலையின் குறுக்கே நாய் ஒன்று ஓடியது. இதை பார்த்த மணிகண்டபிரியன் திடீரென பிரேக் பிடித்தார். அப்போது எதிர்பாராத விதமாக விஜயா மோட்டார் சைக்கிளில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
இதில் அவர் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மணிகண்டபிரியன் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் விஜயாவை மீட்டு சிகிச்சைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி விஜயா பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து மணிகண்டபிரியன் மந்தாரக்குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.