ரஷிய பெண் பாலியல் பலாத்கார வழக்கு: கைது செய்யப்பட்டவர்களின் காவல் வருகிற 24-ந் தேதி வரை நீட்டிப்பு
ரஷிய பெண் பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் காவல் வருகிற 24-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலையில் உள்ள தனியார் அபார்ட்மென்டில் கடந்த ஜூலை மாதம் 16-ந் தேதி ரஷிய நாட்டை சேர்ந்த 21 வயது இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு சுயநினைவின்றி மயக்க நிலையில் கிடந்தார். பின்னர் அவர் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து ரஷிய பெண் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அபார்ட்மென்ட் உரிமையாளர் பாரதி, அவரது அண்ணன் நீலகண்டன், மணிகண்டன், வெங்கடேசன் ஆகியோரை டவுன் போலீசார் கைது செய்து வேலூர் மத்திய ஜெயிலில் அடைத்தனர். மேலும் 4 பேரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையில் விசாரணை முடிந்த பிறகு இளம்பெண் ரஷிய நாட்டுக்கு சென்றுவிட்டார்.
திருவண்ணாமலை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடைபெற்று வந்த இந்த வழக்கு விசாரணை நேற்று திருவண்ணாமலை மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
இந்த நிலையில் பாரதி, நீலகண்டன், மணிகண்டன், வெங்கடேசன் ஆகியோரின் நீதிமன்ற காவல் முடிந்த நிலையில் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் அவர்களை போலீசார் ஆஜர்படுத்தினர். இதனை விசாரித்த நீதிபதி (பொறுப்பு) மகிழேந்தி, அவர்களது நீதிமன்ற காவலை வருகிற 24-ந் தேதி (வெள்ளிக்கிழமை) வரை நீட்டித்து உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் 4 பேரையும் மீண்டும் வேலூர் மத்திய ஜெயிலில் அடைத்தனர்.