கூடலூர் கோக்கால் மலையடிவாரத்தில் நிலச்சரிவு அபாயம் சாலையில் பல இடங்களில் விரிசல்; கிராம மக்கள் அச்சம்

கூடலூர் கோக்கால் மலையடிவாரத்தில் நிலச்சரிவு அபாயம் காணப்படுகிறது. சாலையில் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளதால், கிராம மக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.

Update: 2018-08-20 22:30 GMT

கூடலூர்,

கூடலூரில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. இதையொட்டி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, பல இடங்களில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. மேலும் கூடலூர்– ஊட்டி மற்றும் கேரள மலைப்பாதைகளில் மண் சரிவு ஏற்பட்டது. தற்போது கூடலூரில் மழையின் தீவிரம் சற்று குறைந்துள்ளது. இருப்பினும் பல இடங்களில் சாலைகளில் விரிசல் ஏற்பட்டு வருகிறது. இதையொட்டி ஆத்தூர், பெரியசோலை கிராமங்களுக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை. கூடலூரில் இருந்து ஊட்டி செல்லும் மலைப்பாதையில் உள்ள சிமெண்டு பாலங்களின் ஓரத்தில் மண் அரிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனால் பாலங்கள் சேதமடையாமல் இருக்க மண் மூட்டைகளை அடுக்கி வைக்கும் பணியில் நெடுஞ்சாலைத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

கூடலூரில் இருந்து கோக்கால் மலையடிவாரம் வழியாக ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட லாரஸ்டன், 4–ம் நெம்பர் ஆகிய கிராமங்களுக்கு சாலை செல்கிறது. நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு அந்த சாலையின் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டது. இதனை மலையடிவாரத்தின் கீழ் பகுதியில் உள்ள ஆதிவாசி மக்கள் பார்த்தனர். அப்போது மலையடிவாரத்தில் இருந்து சாலை வரை ஆங்கில எழுத்தான ‘u‘ வடிவில் விரிசல் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்து விரிசல்களை பார்வையிட்ட அதிகாரிகள், நிலச்சரிவு அபாயம் இருப்பதை உறுதி செய்தனர். இதனால் அந்த கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

மேலும் அந்த ஆதிவாசி கிராமத்துக்கு செல்லும் சிமெண்டு பாதையில் 2 அங்குல அகலத்துக்கு விரிசல் ஏற்பட்டுள்ளதும் தெரியவந்தது. வட்டப்பாறை என்ற இடத்தில் வீட்டு சுவர்களிலும் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ஆதிவாசி மக்கள் கூறும்போது, கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு கனமழையின்போது, கோக்கால் மலையடிவார நிலத்தில் இருந்து தண்ணீர் வெளியேறியது. இதனால் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போது மீண்டும் கோக்கால் மலையடிவாரத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. அந்த விரிசலில் சிறிய அளவிலான மரத்துண்டுகளை நுழைத்தபோது 6 அடி ஆழம் வரை சென்றது. மேலும் அதனடியில் நீரோட்டம் உள்ளது. தற்போது மழை குறைந்திருந்தாலும், மீண்டும் கனமழை பெய்தால் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது என்று அச்சத்துடன் கூறினார்கள். இதுகுறித்து ஆர்.டி.ஓ. முருகையனிடம் கேட்டபோது, அந்த இடத்தில் ஆய்வு நடத்தி பாதுகாப்புக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

பந்தலூர் தாலுகாவில் பெய்த கனமழை காரணமாக சேரம்பாடியில் இருந்து சுல்தான்பத்தேரிக்கு செல்லும் வழியில் கோரஞ்சால் என்ற இடத்தில் சாலை சேதம் அடைந்துள்ளது. இதனால் போக்குவரத்து பாதிக்கும் அபாயம் நிலவுகிறது. கீழ்கய்யுன்னி என்ற இடத்தில் சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளி அருகில் மண் சரிவு ஏற்பட்டு, மரம் ஒன்று வேரோடு சாய்ந்து விழுந்து நிலை காணப்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் நசீமா, உதவி பொறியாளர் இளவரசன், சேரம்பாடி வருவாய் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு நடத்தினர். இதையடுத்து அங்கு அசம்பாவிதம் ஏற்படாமல் தவிர்க்க மண் மூட்டைகளை அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்