கருவுறாத பெண்ணுக்கு 10 மாதம் சிகிச்சை அளித்த அரசு டாக்டர்கள்: கலெக்டரிடம் கணவர் கண்ணீர் புகார்

கருவுறாத பெண்ணை, கர்ப்பிணி என்று கூறி அவருக்கு 10 மாதம் சிகிச்சை அளித்த அரசு டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கலெக்டரிடம் கணவர் கண்ணீர் மல்க புகார் மனு கொடுத்தார்.

Update: 2018-08-20 23:30 GMT

மதுரை,

மதுரை விரகனூர் கோழிமேட்டை சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன் (வயது32). இவரது மனைவி யாஸ்மின் (26). இவர்களுக்கு 8 வயதில் மகன் இருக்கிறான். இந்த நிலையில் கடந்த ஆண்டு, அக்டோபர் மாதம் யாஸ்மினுக்கு, வயிற்றில் கரு உருவானதற்கான அறிகுறி தெரிந்தது. இதனால் அவர், மதுரை அண்ணாநகரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்று தான் கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்து கொண்டார்.

பின்னர் தம்பதியினர் அருகில் உள்ள விராதனூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றனர். அங்கும் யாஸ்மின் கர்ப்பம் உறுதி செய்யப்பட்டு, கர்ப்பிணிகளுக்கு வழங்கப்படும் பதிவு எண்ணுடன் கூடிய தாய்–சேய் பாதுகாப்பு அட்டை வழங்கப்பட்டது. 4–வது மாதத்தில் யாஸ்மினுக்கு கர்ப்பிணி உதவித்தொகை ரூ.4 ஆயிரமும் அவரது வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது.

ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து தொடர் சிகிச்சைக்காக யாஸ்மினை, மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு செல்லுமாறு அறிவுறுத்தினர். அதனால் அவர் அங்கு சென்று பரிசோதனையும், சிகிச்சையும் மேற்கொண்டார்.

அவருக்கு கடந்த 29–ந் தேதி குழந்தை பிறக்கும் என்று ஏற்கனவே கர்ப்பிணி பதிவு அட்டையில் பதிவு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் அந்த தேதியில் யாஸ்மினுக்கு பிரசவ வலி ஏற்படவில்லை. இதனால், நவநீதிகிருஷ்ணன் மனைவியை அழைத்து கொண்டு பெரிய ஆஸ்பத்திரிக்கு சென்றார். அப்போது டாக்டர்கள், அடுத்த வாரம் அழைத்து வருமாறு கூறினர். இதனால் மீண்டும் அழைத்து சென்றார். அப்போதும் யாஸ்மினுக்கு பிரசவ வலி வரவில்லை.

சந்தேகம் அடைந்த டாக்டர்கள், யாஸ்மினை பரிசோதனை செய்து பார்த்தனர். பின்னர் அவர்கள், நவநீதகிருஷ்ணனிடம் உங்களது மனைவி வயிற்றில் குழந்தை இல்லை, அது வெறும் கட்டிதான் என்ற தகவலை தெரிவித்துள்ளனர். இதனால் அவர் கடும் அதிர்ச்சி அடைந்து டாக்டர்களுடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டார்.

பின்னர் நவநீத கிருஷ்ணன், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த குறைத்தீர்க்கும் முகாமில் கலெக்டர் வீரராகவராவை சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தார். பிறகு அவர் கண்ணீர் மல்க நிருபர்களிடம் கூறுகையில், ‘‘ஸ்கேன் செய்து பார்த்த போதெல்லாம், குழந்தை நன்றாக இருப்பதாக கூறி விட்டு, இப்போது பிரசவ தேதி தள்ளி போனவுடன் குழந்தை இல்லை, வயிற்றில் கட்டி என்கின்றனர். எனவே மீண்டும் ஒரு ஸ்கேன் சென்டரில் சென்று பரிசோதித்தோம். அவர்கள் வயிற்றில் கட்டி எதுவும் இல்லை என்று அறிக்கை தந்து இருக்கிறார்கள். எனவே 10 மாதம் கர்ப்பிணி என்று சிகிச்சை அளித்து விட்டு, தற்போது கட்டி இருப்பதாக பொய்யான தகவல் கூறிய அரசு டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்’’ என்றார்.

மேலும் செய்திகள்