சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களின் குடிநீர், விவசாய தேவைக்கு ஏற்ப வைகையில் தண்ணீர் திறக்காவிட்டால் மறியல்

சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களின் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு முழுமையாக கிடைக்கும் வகையில் தண்ணீர் திறக்கவிட்டால் சாலை மறியல் நடைபெறும் என்று அனைத்துக்கட்சி ஆர்ப்பாட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

Update: 2018-08-20 23:00 GMT

மானாமதுரை,

கேரளா மற்றும் தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இந்த மழை காரணமாக வைகை அணை 69 அடியை எட்டியது. இதற்கிடையில் கடந்த 5 ஆண்டுகளாக வைகை ஆற்றில் தண்ணீர் திறக்கப்படாததால் சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. வைகை ஆற்றை நம்பி உள்ள 72 கூட்டுக்குடிநீர் திட்டங்களும் தண்ணீரின்றி செயல்படுத்தப்படவில்லை. தண்ணீரின்றி விவசாய கிணறுகள் அனைத்தும் வறண்டு விவசாயமே கேள்விக்குறியாகி உள்ளது. இந்தநிலையில் வைகை அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களின் பாசனத்திற்காக பெரியார் பாசன கால்வாய்களில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மேலும் அணை நிரம்பியதை அடுத்து தற்போது உபரி நீர் ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது.

ஆனால் ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ள தண்ணீர் சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களின் குடிநீர், விவசாய பாசனத்திற்கு போதுமானதாக இருக்காது. எனவே அதனை பூர்த்தி செய்யும் வகையில் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்றும், மானாமதுரை அருகே தெ.புதுக்கோட்டையில் செயல்பட்டு வரும் அரசு மணல் குவாரிக்காக தண்ணீர் திறப்பில் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக குற்றம்சாட்டியும் மானாமதுரை தாலுகா அலுவலகம் முன்பு நேற்று அனைத்துக்கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ. மாரியப்பன் கென்னடி தலைமை தாங்கினார். இதில் தி.மு.க. சார்பில் பொண்ணுச்சாமி, அண்ணாதுரை, அ.ம.மு.க. சார்பில் நகர செயலாளர் கோபால், ஒன்றிய செயலாளர்கள் சரவணன் வேலுச்சாமி, அசோக், பூவந்தி ஆறுமுகம் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகள், திராவிடர் கழகம், விவசாய சங்கங்களின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது, 2 மாவட்டங்களின் குடிநீர் மற்றும் விவசாய தேவைக்கு ஏற்ப வைகையில் தண்ணீர் திறக்காவிட்டால் சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என்று தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்