இளம்பெண் எரித்து கொலை: குற்றவாளியை கைது செய்யாவிட்டால் தீக்குளிப்போம், கலெக்டர் அலுவலகத்தில் பெற்றோர் மனு

ராமநாதபுரம் அருகே இளம்பெண் உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளியை கைது செய்யாவிட்டால் குடும்பத்துடன் தீக்குளிப்போம் என்று கலெக்டர் அலுவலகத்தில் பெற்றோர் மனு கொடுத்தனர்.;

Update: 2018-08-20 22:15 GMT

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை அருகே உள்ள ஆலங்குளம் பகுதியை சேர்ந்தவர் வீரபாண்டி மகள் மாலதி(வயது 20). கடந்த மாதம் 13–ந்தேதி உத்தரகோசமங்கை விலக்கு அருகே கருங்குளம் கண்மாய் பகுதியில் உடல் எரிந்த நிலையில் எலும்புகூடாக மாலதியின் உடல் கிடந்தது. இந்த சம்பவம் தொடர்பாக கருங்குளத்தை சேர்ந்த சிவக்குமார் என்பவரை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.

இந்த நிலையில் கொலை செய்யப்பட்ட மாலதியின் தந்தை வீரபாண்டி குடும்பத்தினருடன் நேற்று காலை ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து கண்ணீர் மல்க மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:– எனது மகள் கொலை செய்யப்பட்ட வழக்கில் போலீசார் இதுவரை எந்த மேல் நடவடிக்கையும் எடுக்கவில்லை. குற்றவாளி குறித்து எந்த தகவலும் கண்டுபிடிக்கவில்லை. குற்றவாளியையும், அவரோடு தொடர்புடையவர்களையும் வழக்கில் இருந்து தப்ப வைப்பதற்காக திட்டமிட்டு செயல்பட்டு வருவதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதனால் மனவேதனை அடைந்துள்ளோம். எனது மகள் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளையும், குற்றவாளிக்கு உடந்தையாக உள்ள போலீசார் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது மகள் கொலை சம்பவத்தில் நீதி கிடைக்காவிட்டால் குடும்பத்தினருடன் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ்மீனா கூறியதாவது:– இளம்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக பரமக்குடி குற்ற தனிபிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு தேவிபட்டினம் அருகில் கோவில் ஒன்றில் சிவக்குமார் தங்கியிருப்பதாகவும், தினமும் ஒருவர் சாப்பாடு கொடுத்து வருவதாகவும் கிடைத்த தகவலின் பேரில் அங்கு சென்று பார்த்த போது யாரும் இல்லை.

இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக கருதப்படும் சிவக்குமார் சிக்கினால் தான் உண்மை நிலை தெரியவரும். மாலதியின் செல்போன் கிடைக்காததால் முழுவிவரங்கள் கிடைக்கவில்லை. சிறிய தகவல் கிடைத்தாலும் கவனமுடன் விசாரணை மேற்கொண்டு வருகிறோம். விரைவில் குற்றவாளி கைது செய்யப்படுவார். இவ்வாறு அவர் கூறினார். இந்தநிலையில் இச்சம்பவம் தொடர்பான ஆரம்ப கட்ட விசாரணையில் ஈடுபட்ட போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் பேரையூர் போலீஸ் நிலையத்திற்கும், காவலர் சடாமுனியன் உச்சிப்புளி போலீஸ் நிலையத்திற்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்