விபத்தில் சிக்கி நடமாட முடியாமல் பாதிக்கப்பட்டவருக்கு ரூ.10ஆயிரம் நிதி

விபத்தில் சிக்கி நடமாட முடியாமல் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு மாதாந்திர உதவித்தொகை உத்தரவுடன் தனது விருப்புரிமை நிதியில் இருந்து ரூ.10 ஆயிரம் நிதியை கலெக்டர் நடராஜன் உடனடியாக வழங்கினார்.;

Update: 2018-08-20 22:15 GMT

ராமநாதபுரம்,

கடலாடி தாலுகா மேலக்கிடாரம் பகுதியை சேர்ந்தவர் சவுந்திரபாண்டியன்(வயது 40). டிராக்டர் டிரைவரான இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு நிலத்தில் நெற்கதிர்களை டிராக்டரில் ஏற்றிக்கொண்டிருந்தபோது மேல் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்து விட்டார். அதில் கழுத்து நரம்பு மற்றும் முதுகெலும்பு பாதிக்கப்பட்டு நடமாட முடியாமல் படுத்த படுக்கையாகி போனார். தொடர் மருத்துவ சிகிச்சை மேற்கொண்டும் எந்த பலனும் ஏற்படாமல் படுத்த நிலையிலேயே தனது வாழ்க்கையை கழித்து வருகிறார். இவருக்கு ஊனமுற்றோர் மறுவாழ்வுத்துறை மூலம் 90 சதவீத ஊனத்திற்கான சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட சவுந்திரபாண்டியனுக்கு கல்யாணி என்ற மனைவியும், தன்ராஜ், உதயா என்ற மகன்களும் உள்ளனர். சவுந்தரபாண்டியனில் உடல்நிலையை கவனித்துக்கொண்டும் குழந்தைகளை படிக்க வைக்கவும் சிரமப்பட்டு வரும் கல்யாணி தனது கணவருக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்க கோரி கடலாடி தாலுகா அலுவலகத்தில் மனு கொடுத்தார். பலமுறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

அதைத்தொடர்ந்து நேற்று காலை கல்யாணி தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். நடமாட முடியாத நிலையில் கொண்டுவரப்பட்ட சவுந்திரபாண்டியன் குறித்து தகவல் அறிந்த கலெக்டர் நடராஜன் நேரில் வந்து விவரங்களை கேட்டறிந்தார். பின்பு உடனடியாக சவுந்திரபாண்டியனுக்கு மாதாந்திர உதவித்தொகை உத்தரவினை 24 மணி நேரத்திற்குள் வழங்க சம்பந்தபட்ட அதிகாரிகளுக்கு கலெக்டர் நடராஜன் உத்தரவிட்டார்.

மேலும், பாதிக்கப்பட்டவரின் நிலையை கண்டு அவரின் மருத்துவ சிகிச்சைக்காக தனது விருப்புரிமை நிதியில் இருந்து ரூ.10 ஆயிரத்திற்கான காசோலை அந்த இடத்திலேயே வழங்கினார். மேலும், குழந்தைகளின் கல்வி மற்றும் சவுந்திரபாண்டியனின் மருத்துவ சிகிச்சைக்கு தேவையான அனைத்து உதவிகளை செய்வதாகவும் கூறினார். வெகுநாட்களாக அலைந்த நிலையில் உடனடியாக உதவி வழங்கிய கலெக்டருக்கு, கல்யாணி கண்ணீர் மல்க நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்