ராஜபாளையத்தில் ஒரே மோட்டார்சைக்கிளில் சென்ற 3 பேர் லாரி மோதி பலி
ராஜபாளையம் அருகே ஒரே மோட்டார்சைக்கிளில் சென்ற கட்டிட தொழிலாளிகள் 3 பேர் லாரி மோதி பரிதாபமாக பலியாயினர்.
ராஜபாளையம்,
நெல்லை மாவட்டம், கரிவலம்வந்தநல்லூர் சந்தை தெருவைச் சேர்ந்தவர்கள் சுப்பிரமணியன் மகன் முனியாண்டி (வயது 25). கிருஷ்ணசாமி மகன் கணேசன் (30). பாண்டியராஜ் மகன் செந்தூர் (26).
கட்டிட தொழிலாளிகளான இவர்கள் 3 பேரும் கட்டிடப்பணி ஒப்பந்தம் தொடர்பாக பேசுவதற்காக ஒரே மோட்டார் சைக்கிளில் ராஜபாளையம் வந்தனர். பின்னர் அவர்கள் அங்கு வேலையை முடித்துக் கொண்டு ஊருக்கு புறப்பட்டனர்.
அவர்கள் தேசிகாபுரம் பஸ் நிலையம் அருகே வந்தபோது சங்கரன்கோவிலில் இருந்து ராஜபாளையம் நோக்கி வந்த ஒரு லாரி மோதியது. இதில் அவர்கள் 3 பேரும் தூக்கி வீசப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விபத்து குறித்து தளவாய்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.