குளங்களை தூர்வாரி தண்ணீர் நிரப்ப வேண்டும் மாவட்ட வருவாய் அலுவலரிடம் தொழிற்சங்கத்தினர் கோரிக்கை

குளங்களை தூர்வாரி தண்ணீர் நிரப்ப வேண்டும் என மாவட்ட வருவாய் அலுவலரிடம் காங்கிரஸ் தொழிற்சங்கத்தினர் கோரிக்கை வைத்தனர்.

Update: 2018-08-20 22:45 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. தஞ்சை கரந்தை தட்டாங்குளம் பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட 20-க்கும் மேற்பட்டோர் வந்து, மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேலிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதில், தட்டாங்குளம் பகுதியில் 80 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்கள் தெருவில் பாதாள சாக்கடை குழியில் அடைப்பு ஏற்பட்டு அடிக்கடி கழிவுநீர் தெருவில் செல்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. மாநகராட்சி நிர்வாகத்திடம் பல முறை அனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இதை சரி செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் எங்கள் தெருவுக்கு அருகே வடவாற்றங்கரையில் சுடுகாடு உள்ளது. இங்கு மாநகராட்சி லாரிகள் மூலம் கொண்டு வரப்படும் குப்பைகள் கொட்டப்பட்டு தீ வைத்து கொளுத்தி விடுகின்றனர். இதனால் எங்கள் பகுதியில் புகை மண்டலமாக காணப்படுவதுடன் சுவாசிக்கவும் சிரமம் ஏற்படுகிறது. எனவே குப்பைகள் கொட்டப்படுவதை தடுப்பதுடன், தீ வைத்து கொளுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

தஞ்சை மாவட்ட பாக்ஜலசந்தி நாட்டுப்படகு மற்றும் கண்ணாடி நார் இழைபடகு மீனவர்கள் நலச்சங்க தலைவர் ஜெயபால் தலைமையில் நிர்வாகிகள் சிலர், மாவட்ட வருவாய் அலுவலரிடம் அளித்த மனுவில், தஞ்சை மாவட்டத்தில் உள்ள 34 மீனவ கிராமங்களில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீன்பிடி தொழில் செய்து வருகிறோம். சிலர், அரசால் தடை செய்யப்பட்ட இரட்டை மடி வலைகள், சுருக்கு மடி, மீன்மடி வலைகளை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் நாட்டுபடகு மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. இந்த வலைகள் பயன்படுத்துவதை தடுக்காவிட்டால் விசை படகு மீனவர்களுக்கும், நாட்டுபடகு மீனவர்களுக்கும் கடலில் சட்ட ஒழங்கு பிரச்சினை ஏற்படும் சூழ்நிலை உள்ளது. எனவே தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்திய தேசிய காங்கிரஸ் தொழிற்சங்கத்தின் மாவட்ட தலைவர் ராகவேந்திரதாசன் மற்றும் நிர்வாகிகள் அளித்த மனுவில், வடவாற்றில் இருந்து கரந்தையில் உள்ள கருணாகரசாமி கோவில் குளத்தில் தண்ணீர் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். வடவாற்றில் தடுப்பணை கட்ட வேண்டும். மேலும் கரந்தை பகுதியில் உள்ள சேர்வைக்காரன் குளம், காசிபண்டிதர் குளம், கோவாளன் குளம் ஆகியவை இருக்கும் இடம் தெரியாமல் போய்விட்டன. எனவே இந்த குளங்களை தூர்வாரி தண்ணீர் நிரப்ப வேண்டும். மரைக்கான் குளம், தாமரைகுளம் ஆகியவற்றிலும் தண்ணீர் நிரப்பினால் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என்று கூறப்பட்டுள்ளது.

சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் ஜெயபால் தலைமையில் நிர்வாகிகள் சிலர், அளித்த மனுவில், தஞ்சை மாநகராட்சியில் தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் மூலம் பணி புரியும் தொழிலாளர்களின் மாத ஊதியம் வழங்குதல், வருங்கால வைப்புநிதி, மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கு தொகை பிடித்தம் செய்தல் போன்றவற்றில் முறைகேட்டில் ஈடுபட்ட ஒப்பந்ததாரர் மீதும், அதற்கு துணை போன மாநகராட்சி அதிகாரி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. 

மேலும் செய்திகள்