தூத்துக்குடி மாவட்டத்தில் 50 சதவீதம் குளங்கள் நிரம்பி உள்ளன
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குளங்களில் 50 சதவீதம் குளங்கள் நிரம்பி உள்ளன என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.
தூத்துக்குடி,
இதுகுறித்து அவர் நேற்று காலை கலெக்டர் அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவுப்படி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து ரசாயன பொருட்கள் அகற்றும் பணி நிறுத்தப்பட்டது. அதேபோன்று நிர்வாக பணிகளை மேற்கொள்ள ஆலை கமிட்டியின் பிரதிநிதிக்கு அனுமதி அளிக்குமாறு கூறப்பட்டு இருந்தது. அதன்படி ஸ்டெர்லைட் ஆலையின் பிரதிநிதியை மாவட்ட கண்காணிப்பு குழுவில் ஏற்கனவே சேர்த்து உள்ளோம். அவர் நிர்வாக பணிகளை மேற்கொள்வதற்கு, அனுமதி அளிக்க தயாராக இருக்கிறோம்.
துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டு உள்ளது. ஆனால் சி.பி.ஐ. விசாரணை தொடர்பாக எந்தவித தகவல்களும் வரவில்லை.
தாமிரபரணி ஆற்றில் கடந்த சில நாட்களாக 15 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேறியது. தூத்துக்குடி மாவட்டத்தில் 4 கால்வாய் உள்ளன. இந்த கால்வாய்களில் 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் எடுக்க முடியும். அதன் மூலம் 53 குளங்களையும் நிரப்பி வருகிறோம். தற்போது 50 சதவீதம் குளங்கள் நிரம்பி உள்ளன. இதே போன்று 15 நாட்கள் தொடர்ந்து தண்ணீர் வந்தால் அனைத்து குளங்களும் நிரம்பி விடும். வெள்ளம் பாதிப்பு ஏற்படாத வகையில் அனைத்து கால்வாய்களும் தூர்வாரப்பட்டு உள்ளன. கோரம்பள்ளம் குளம் தூர்வாரும் பணி நடந்து வருகிறது. அங்கும் அதிக அளவில் தண்ணீர் சேகரிக்கப்படும்.
கேரளாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. இதுவரை 10 லாரிகளில் ரூ.1 கோடியே 3 லட்சம் மதிப்பிலான பொருட்களை அனுப்பி உள்ளோம். மேலும் முகாமில் இருந்து வீடு திரும்பும் மக்களுக்கு தேவையான பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்குவதற்கான பணி தருவை மைதானத்தில் நடந்து வருகிறது. அந்த பொருட்களும் விரைவில் கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஸ்ரீவைகுண்டம் வடகால் மூலம் பாசன வசதி பெறும் குளங்களில் ஆறுமுகமங்கலம், பேய்க்குளம் நிரம்பியது. தொடர்ந்து தூத்துக்குடி புதுக்கோட்டை அருகே உள்ள குலையன்கரிசல் குளத்துக்கு தண்ணீர் செல்கிறது. அந்த குளம் நிரம்பிய பின்னர் தூத்துக்குடி கோரம்பள்ளம் குளத்துக்கு தண்ணீர் செல்லும். ஸ்ரீவைகுண்டம் தென்கால் மூலம் பாசன வசதி பெறும் குளங்களில் தென்திருப்பேரை கடம்பாகுளம் முதல் திருச்செந்தூர் எல்லப்பநாயக்கன்குளம் வரையிலான குளங்களுக்கு தண்ணீர் வந்த வண்ணம் உள்ளது. எல்லப்பநாயக்கன்குளத்தில் குறைந்த அளவே தண்ணீர் உள்ளது.
மருதூர் மேலக்கால் மூலம் பாசன வசதி பெறும் குளங்களில் வெள்ளூர் குளத்தில் இருந்து செம்பூர் பெரிய குளத்துக்கு தண்ணீர் செல்கிறது. இந்த குளம் நிரம்பினால்தான் சடையநேரிகுளம், புத்தன்தருவை குளத்துக்கு தண்ணீர் செல்லும்.