தஞ்சை அருகே பரிதாபம்: கோவில் குளத்தில் மூழ்கி அண்ணன்-தம்பி பலி

தஞ்சை அருகே கோவில் குளத்தில் மூழ்கி அண்ணன்-தம்பி பரிதாபமாக இறந்தனர்.

Update: 2018-08-20 23:00 GMT
சாலியமங்கலம்,

தஞ்சையை அடுத்த சாலியமங்கலம் அருகே உள்ள ஆர்சுத்திப்பட்டு கிராமம் வடக்கு தெருவை சேர்ந்தவர் நாராயணசாமி. விவசாயியான இவருடைய மனைவி சங்கீதா. இவர்களது மகன்கள் வசந்தகுமார்(வயது 11). அபிமன்யூ(9). மகள் தியாகவிஜயலெட்சுமி. இவர்களில் வசந்தகுமார், ஆர்சுத்திப்பட்டு கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பும், அபிமன்யூ, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 4-ம் வகுப்பும் படித்து வந்தனர்.

தற்போது ஆறுகளில் தண்ணீர் நிரம்ப செல்வதால் ஆர்சுத்திப்பட்டு கிராமத்தில் விவசாய பணிகள் நடந்து வருகிறது. நேற்று காலை விவசாய பணிகள் நடைபெறும் வயலுக்கு வசந்தகுமாரும், அபிமன்யூவும் சென்று பார்த்தனர். பள்ளிக்கூடத்திற்கு செல்ல நேரம் ஆனதால் இருவரும் லட்சுமி நரசிம்மர் கோவில் குளத்தில் குளிப்பதற்காக சென்றனர்.

கல்லணைக்கால்வாயில் இருந்து பிரிந்து செல்லும் நெய்வாசல் வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் அந்த தண்ணீர், குளத்திற்கு சென்று குளம் நிரம்பி காணப்பட்டது. அந்த குளத்தில் இறங்கி இருவரும் குளித்தனர். இருவருக்கும் நீச்சல் தெரியாததால் 10 அடி ஆழத்திற்குள் சென்ற அபிமன்யூ திடீரென தண்ணீரில் மூழ்கினார்.

அவரை காப்பாற்ற வசந்தகுமார் முயற்சி செய்தார். அவரும் தண்ணீரில் மூழ்கினார். இருவருடைய கைகள் மட்டும் தண்ணீருக்கு மேல் தெரிந்ததையும், தண்ணீருக்குள் மூழ்குவதையும் அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து குளத்திற்குள் குதித்து இருவரையும் மீட்டனர். அப்போது அவர்களது உடலில் அசைவு இருந்ததால் உடனடியாக இருவரையும் தஞ்சை ராசா மிராசுதார் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள், இருவரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

பின்னர் பிரேத பரிசோதனைக்காக இருவரது உடல்களும் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன. இது குறித்து தஞ்சை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பசுபதி, சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரே நேரத்தில் தங்களது இரண்டு ஆண் குழந்தைகளையும் பறிகொடுத்த நாராயணசாமி தம்பதியினர் தங்கள் மகன்களின் உடல்கள் மீது விழுந்து கதறி அழுத காட்சி காண்போரின் கண்களை குளமாக்கியது. ஒரே குடும்பத்தில் அண்ணனும், தம்பியும் இறந்ததால் ஆர்சுத்திப்பட்டு கிராமமே மிகுந்த சோகத்தில் ஆழ்ந்தது.

காவிரி, வெண்ணாறு, கல்லணைக்கால்வாய், கொள்ளிடத்தில் தண்ணீர் அதிக அளவில் திறந்து விடப்பட்டுள்ளதால் ஆறுகளில் இரு கரைகளையும் தொட்டபடி தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. எனவே ஆறுகளில் யாரும் குளிக்கச் செல்ல வேண்டாம் எனவும், குளம், ஏரிகளில் தண்ணீர் நிரம்பி இருந்தால் அவற்றில் யாரும் குளிக்க வேண்டாம் எனவும் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களிடம் போலீசார் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். ஆனால் இதை பொருட்படுத்தாமல் பலர் ஆறுகளில் குளித்து வருகின்றனர். குழந்தைகளை நீர்நிலைகளின் அருகே செல்ல அனுமதிக்க வேண்டாம் என போலீசார் மீண்டும் அறிவுறுத்தியுள்ளனர். 

மேலும் செய்திகள்