ஜேடர்பாளையத்தில் தடுப்பணைக்கட்டி ஏரிகளில் நீர் நிரப்ப வேண்டும் விவசாயிகள் சங்கத்தினர் மனு

ஜேடர்பாளையத்தில் தடுப்பணைக்கட்டி ஏரிகளில் நீர் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கலெக்டர் அன்பழகனிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

Update: 2018-08-20 22:45 GMT
கரூர்,

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கணவனால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, வேலைவாய்ப்பு, காவல்துறை நடவடிக்கை, புதிய குடும்ப அட்டை, கல்விக்கடன், தொழில் கடன், குடிநீர் வசதி, சாலை வசதி, அடிப்படை வசதிகள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 315 மனுக்கள் வரப்பெற்றன. பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களை கலெக்டர் பெற்றுக்கொண்டு பரிசீலித்து, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுத்திட உத்தரவிட்டார்.

இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க கரூர் மாவட்ட துணை செயலாளர் ராஜாங்கம் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. வெள்ளியணை ராமநாதன் உள்ளிட்டோர் ஒரு மனு கொடுத்தனர். அதில், ஏற்கனவே ஜேடர்பாளையத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டி அதனை கரூர் மாவட்டத்தில் உள்ள தாதம்பாளையம் ஏரி, வெள்ளியணை ஏரி, ஜெகதாபி குளம், உப்பிடமங்கலம் குளம், பஞ்சப்பட்டி ஏரி, பி.உடையாப்பட்டி ஏரி, மாவத்தூர் குளம் ஆகியவற்றுடன் இணைக்கும் திட்டம் உள்ளது. தற்போது காவிரியில் வெள்ள நீர் கடலில் சென்று வீணாக கலக்கும் சூழலில் இத்திட்டத்தை நிறைவேற்றினால் குளம், ஏரிகள் உள்ள பகுதியில் விவசாயம் செழிக்கும், விவசாயிகளும் வறட்சியில் இருந்து மீண்டு உழவுத்தொழிலில் அதிகளவில் ஈடுபட முன்வருவார்கள் எனவே ஜேடர் பாளையத்தில் தடுப்பணைக் கட்டி ஏரிகளில் நீர் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

தோகைமலை ஒன்றியம் சின்னப்பனையூரை சேர்ந்த பொதுமக்கள் அளித்துள்ள மனுவில், கரூர் மாவட்டம் தொக்கம்பட்டி முதல் நவலூர் குட்டப்பட்டு வரை புதிதாக தேசிய நெடுஞ்சாலை 64 கிலோ மீட்டர் தொலைவில் அமைய உள்ளது. இந்த சாலைக்காக விவசாய நிலங்களில் அனுமதியின்றி எல்லைக்கல் நடப்பட்டுள்ளது. இந்த சாலை அமைந்தால் ஆர்ச்சம்பட்டி, களத்துப்பட்டி, சின்னப்பனையூர், ஆலத்தூர், வடக்கிப்பட்டி, செம்மேடு, தளிஞ்சி, மேலப்பட்டி உள்பட நூற்றுக்கணக்கான விவசாய நிலங்களின் ஆழ்குழாய் கிணறுகள், 500 ஏக்கர் விவசாய நிலங்கள், பாசன குளங்கள் அழிக்கப்படும் நிலை உள்ளது. மேலும் ஆயிரக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிடும். எனவே கரூர்- திருச்சிக்கு புதிதாக அமைக்கப்பட உள்ள சாலைத்திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.

செய்யப்பகவுண்டன்புதூர் பகுதி பொதுமக்கள் அளித்த மனுவில், எங்கள் பகுதியில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு தற்போது அரசு மதுக்கடை அமைக்க கட்டுமானப்பணிகள் நடந்து வருகிறது. இந்த கடை அமைந்தால் இப்பகுதி பெண்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் இளம் பெண்கள் இந்த கடை வழியாகத்தான் செல்ல வேண்டியிருக்கும். இதனால் பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை ஏற்படும். எனவே இங்கு அரசு மதுபானக்கடை அமைய அனுமதிக்கக்கூடாது என தெரிவித்துள்ளனர்.

அரவக்குறிச்சி அடுத்த சீத்தப்பட்டி புதுகாலனியை சேர்ந்த இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர்கள் அளித்த மனுவில், எங்கள் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகிறார்கள். எங்களுக்கு கொடையூர் ஊராட்சி மூலம் ஆழ்குழாய் கிணறு அமைத்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த இரு மாதங்களாகவே ஆழ்குழாய் கிணற்றின் மோட்டார் பழுதாகிவிட்டது எனக்கூறி குடிநீர் வினியோகத்தை நிறுத்தி விட்டனர். இதனால் குடிநீருக்காக தனியாரிடம் இருந்து ஒரு குடம் ரூ.5-க்கு விலைக்கு வாங்குகிறோம். அனைவரும் கூலித்தொழிலாளர்களாக இருக்கும் நிலையில் குடிநீருக்கு விலைக்கொடுத்து வாங்கும் நிலை உள்ளதால் மிகவும் அவதிக்குள்ளாகி வருகிறோம். மேலும் புதுகாலனி அருகே உள்ள மீனாட்சிபுரம் வழியாக அரவக்குறிச்சிக்கு காவிரிக்குடி நீர் வினியோகிக்கப்படுகிறது. அதுபோல எங்களுக்கும் காவிரிக்குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

நாம்தமிழர் கட்சியின் கரூர் மாவட்ட நிர்வாகிகள் அளித்துள்ள மனுவில், மண்மங்கலத்தில் இயங்கி வரும் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கு சென்றால் அங்கு பணம் செலுத்துதல், புகைப்படம் எடுத்தல் போன்ற நடைமுறைப்பணிகள் இருந்தும் ஓட்டுனர் தேர்வை மட்டும் கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடத்துகின்றனர். இதனால் மண்மங்கலம் மற்றும் அதனைச்சுற்றியுள்ள பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள். மாவட்டத்தில் குளித்தலை, அரவக்குறிச்சி வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் இத்தகைய நடைமுறை இல்லை. எனவே ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கான அனைத்து நடைமுறைகளையும் மண்மங்கலம் வட்டார போக்குவரத்து அலுவலகங்களிலேயே செயல்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து ஷேக் உசேன் என்ற கல்லூரி மாணவர் தமிழக அளவில் காது கேளாதோருக்கான விளையாட்டு குழு நடத்திய போட்டிகளில் ஈட்டி எறிதல் பிரிவில் 2-ம் பரிசு பெற்றமைக்காக அவரை கலெக்டர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ், சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை கலெக்டர் பாலசுப்பிரமணியம், ஆதிதிராவிடர் நல அலுவலர் பாலசுப்பிரமணியன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நல அலுவலர் குமரேசன், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் ஜான்சி மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்