கொத்தமங்கலத்தில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

கொத்தமங்கலத்தில் குடிநீர் கேட்டு பெண்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2018-08-20 22:30 GMT
கீரமங்கலம்,

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், கீரமங்கலம் அருகே உள்ள கொத்தமங்கலம் கிராமத்திற்கு அங்குள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால், கடந்த பல மாதங்களாக இந்த கிராமத்திற்கு சீராக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால், சீரான குடிநீர் வினியோகம் செய்யக்கோரி பொதுமக்கள் ஊராட்சி அலுவலகம் முற்றுகை, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அந்த பகுதிகளில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கொத்தமங்கலம் மேற்கு பகுதியில் கட்டப்பெரியான் குடியிருப்பு பகுதிக்கு குடிநீர் வழங்கும் ஆழ்குழாய் கிணற்றில் உள்ள மின் மோட்டார் பழுதடைந்து உள்ளதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதையடுத்து கடந்த 11-ந் தேதி ஊராட்சி மன்ற அலுவலகத்தை காலிக்குடங்களுடன் அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். அப்போது அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள் விரைவில் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது.

ஆனால், இதுநாள் வரை ஆழ்குழாய் கிணற்றில் உள்ள மின் மோட்டார் பழுது நீக்கப்பட்டு சீரான குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால், பாதிக்கப்பட்ட கட்டப்பெரியான் குடியிருப்பு பகுதியை சேர்ந்த பெண்கள் குடிநீர் கேட்டு நேற்று காலிக்குடங்களுடன் கொத்தமங்கலம்-ஆலங்குடி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த கீரமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். சாலை மறியல் காரணமாக அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

மேலும் செய்திகள்