பள்ளியின் அருகே டாஸ்மாக் கடைகள் திறப்பதற்கு தடை விதிக்க வேண்டும் பொதுமக்கள் மனு

ஆளப்பிறந்தான் ஊராட்சியில் பள்ளியின் அருகே டாஸ்மாக் கடைகள் திறக்க மாவட்ட நிர்வாகம் தடை விதிக்கக்கோரி குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் மனு அளித்தனர்.

Update: 2018-08-20 22:45 GMT
புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அதிகாரி ராமசாமி தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார்.

கூட்டத்தில் தி.மு.க. நகர செயலாளர் நைனாமுகமது கொடுத்த மனுவில், புதுக்கோட்டை நகராட்சி 41-வது வார்டில் உள்ள ஸ்ரீசெல்லையா நகரில் வசித்து வரும் மக்கள் நகராட்சிக்கு சொத்து வரி செலுத்தி வருகின்றனர். ஆனால், இதுநாள் வரை இப்பகுதி மக்களுக்கு அடிப்டை வசதிகளான தார்சாலை, தெரு விளக்கு, குடிநீர் வசதி போன்ற எதுவும் செய்து தரப்படவில்லை. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து ஸ்ரீசெல்லப்பாநகர் பகுதிக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.

அகில பாரத இந்து மகா சபா மாநில இளைஞரணி துணைத் தலைவர் இளையராஜா கொடுத்த மனுவில், இலுப்பூரில் உள்ள தனியார் அறக்கட்டளை நிர்வாகி ஒருவர் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் பல கோடி ரூபாய் மோசடி செய்து உள்ளார். இந்த அறக்கட்டளையின் மீது கோவை, நாகப்பட்டினம், ஈரோடு, சேலம் ஆகிய மாவட்டங்களில் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. தற்போதும் இந்த அறக்கட்டளையினர் தொடர்ந்து மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆகவே, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கீரனூர் பகுதியில் இந்த அறக்கட்டளை குறித்த விழிப்புணர்வு ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டு இருந்தோம். இந்நிலையில் அறக்கட்டளையை சேர்ந்த சிலர், எங்களை செல்போனில் தொடர்பு கொண்டு மிரட்டுகின்றனர். எங்களை செல்போனில் மிரட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆளப்பிறந்தான் பொதுமக்கள் மற்றும் சுற்று வட்டார கிராம மக்கள் கொடுத்த மனுவில், ஆளப்பிறந்தான் ஊராட்சி பகுதியில் உள்ள பள்ளியின் அருகே ஒரே இடத்தில் 2 டாஸ்மாக் கடை திறக்கபோவதாக அறிகிறோம். அரசு விதிமுறைகளின்படி பள்ளி மற்றும் கோவிலின் அருகே டாஸ்மாக் கடை திறக்கக் கூடாது. ஆனால் தற்போது பள்ளி அருகே டாஸ்மாக் கடை திறந்தால் மாணவ-மாணவிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். எனவே பள்ளியின் அருகே டாஸ்மாக் கடைகள் திறப்பதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதிக்க வேண்டும். இல்லையென்றால் மக்களை ஒன்று திரட்டி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என கூறியிருந்தனர்.

புதுக்கோட்டையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றுபவர்கள் கொடுத்த மனுவில், புதுக்கோட்டை மாவட்டத்தில் மேற்படி தனியார் நிறுவனம் பல களப்பணியாளர்களை தேர்வு செய்து பொதுமக்களிடம் காப்பீடு தொகை வசூல் செய்ய கூறியது. நாங்களும் பொதுமக்களிடம் நிறுவனம் பற்றி எடுத்துக்கூறி அவர்களை உறுப்பினர்களாக சேர்த்தோம். அவர்களிடம் இருந்து அந்த நிறுவனம் மாதம் மாதம் பணத்தை வசூல் செய்து வந்தது. ஆனால் எங்களுக்கு வழங்க வேண்டிய கமிஷன் தொகையை நிறுவனம் வழங்கவில்லை. இது குறித்து அந்த நிறுவனத்திடம் கேட்டால் நிறுவனம் திவால் ஆகிவிட்டது என கூறுகின்றனர். ஆகவே, எங்களுக்கு வழங்கப்பட வேண்டிய கமிஷன் தொகை மற்றும் பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய தொகையை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர்.

மேலும் செய்திகள்