உடல் கருகிய நிலையில் பெண் பிணம் கொலையா? போலீசார் விசாரணை

கள்ளக்குறிச்சியில் உடல் கருகிய நிலையில் பெண் பிணமாக கிடந்தார். அவரை யாரேனும் கொலை செய்து தீ வைத்து எரித்தார்களா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2018-08-20 21:45 GMT

கள்ளக்குறிச்சி,

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி வாய்க்கால் மேட்டு தெருவை சேர்ந்தவர் சின்னசாமி மகள் சீதா (வயது 28). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த செந்தில் என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். இந்தநிலையில் இருவரும் விவாகரத்து பெற்றுக்கொண்டனர். பின்னர் சீதா, பச்சைமுத்து என்பவரை 2–வதாக திருமணம் செய்து கொண்டு, அவருடனும் விவாகரத்து பெற்றார்.

இதையடுத்து சீதா, வாய்க்கால் மேட்டு தெருவில் உள்ள ஒரு வாடகை வீட்டில் தனது மகளுடன் வசித்து வந்தார். மேலும் அவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு வக்கீலிடம் குமாஸ்தாவாக வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சீதா, தனது வீட்டின் பின்புறம் உடல் கருகிய நிலையில் பிணமாக கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் இதுபற்றி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் கள்ளக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

மேலும் விழுப்புரத்தில் இருந்து தடயவியல் நிபுணர் தாரா தலைமையிலான அலுவலர்கள் வந்து வீட்டில் பதிவாகியிருந்த தடயங்களை சேகரித்து சென்றனர். இதையடுத்து சீதாவின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சீதாவை யாரேனும் கொலை செய்து விட்டு, தீ வைத்து எரித்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்து கள்ளக்குறிச்சி கிராம நிர்வாக அலுவலர் அக்பர்பாஷா கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சீதா கொலை செய்யப்பட்டாரா? அல்லது அவரது சாவுக்கு வேறு ஏதேனும் காரணங்கள் உண்டா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். உடல் கருகிய நிலையில் பெண் பிணமாக கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்