திருவட்டார் அருகே துணிகரம்: ஆசிரியர் தம்பதி வீட்டில் 19 பவுன் நகை, பணம் கொள்ளை

திருவட்டார் அருகே ஆசிரியர் தம்பதியர் வீட்டில் 19 பவுன் நகை, ரூ.1 லட்சம் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2018-08-20 23:00 GMT
திருவட்டார்,

குமரி மாவட்டம் திருவட்டார் அருகே வெட்டுகுழி பகுதியை சேர்ந்தவர் மரியதாசன் (வயது 73). இவருடைய மனைவி சுந்தரபாய் (63). இருவரும் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள். இவர்களுக்கு விபின், ஜெபின் என இரண்டு மகன்கள் உண்டு. இருவரும் திருமணமாகி மூத்த மகன் அமெரிக்காவிலும், இரண்டாவது மகன் பெங்களூரிலும் குடும்பத்துடன் தங்கியுள்ளனர். இதனால், ஊரில் உள்ள வீட்டில் மரியதாசனும், அவரது மனைவியும் தங்கியுள்ளனர்.

கடந்த 10 நாட்களுக்கு முன்பு மரியதாசன் உடல் நலம் பாதிக்கப்பட்டு தோட்டாவாரம் பகுதியில் உள்ள ஆயுர்வேத மருத்துவ முகாமில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகிறார். அவருடைய மனைவி சுந்தரபாய் அருகில் இருந்து கவனித்து வருகிறார். இதனால், இவர்களது வீடு பூட்டப்பட்டிருந்தது. பக்கத்து வீட்டை சேர்ந்த லீலாவதி என்பவர் தினமும் மரியதாசன் வீட்டு வளாகத்தை சுத்தம் செய்து, செடிகளுக்கு தண்ணீர் ஊற்றி பராமரித்து வந்தார்.


நேற்று காலையில் லீலாவதி வழக்கம் போல் மரியதாசன் வீட்டு வளாகத்தை சுத்தம் செய்ய சென்றார். அப்போது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே, ஆஸ்பத்திரியில் தங்கியிருந்த மரியதாசனுக்கு தகவல் கொடுத்தார். அத்துடன் அவரது உறவினர் சிலருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.

மரியதாசனும் அவரது உறவினர்களும் வீட்டுக்கு விரைந்து சென்றனர். வீட்டின் உள்ளே சென்ற போது பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன. மேலும், படுக்கை அறை கதவுகள் உடைக்கப்பட்டு அங்கு வைக்கப்பட்டிருந்த 3 பீரோக்கள் உடைக்கப்பட்டிருந்தன. பீரோக்களில் இருந்த 19 பவுன் நகை, ரூ. 1 லட்சத்து 12 ஆயிரம் ரொக்க பணம், விலை உயர்ந்த கேமராக்கள், வாட்சு போன்றவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தன.

வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் கதவை உடைத்து உள்ளே புகுந்து நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.


இந்த கொள்ளை சம்பவம் குறித்து திருவட்டார் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீட்டில் பதிவாகி இருந்த ரேகைகள் பதிவு செய்யப்பட்டன. மேலும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. மோப்ப நாய் வீட்டில் இருந்த சிறிது தூரம் ஓடிவிட்டு நின்றது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

இந்த கொள்ளை குறித்து திருவட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


இதே வீட்டில் கடந்த நவம்பர் மாதம் கொள்ளை சம்பவம் நடந்தது. அப்போது, வீட்டுக்குள் புகுந்த நபர்கள் இன்வெட்டர், டி.வி. போன்ற மின்சாதன பொருட்கள் கொள்ளையடித்து சென்றனர். தற்போது, அதே வீட்டில் 2–வது முறையாக கொள்ளை நடந்திருப்பது அந்த பகுதியில் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த கொள்ளை சம்பவத்தில் உள்ளூர் நபர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுதொடர்பாக தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்