ஹெர்குலியன் சவால் வெற்றி!
‘கிகி’ நடன சவால், ‘மோமோ’ சவால்களுக்கு இடையே விஞ்ஞானிகள் ஹெர்குலியன் சவாலில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். அது என்ன சவால் தெரியுமா?;
ஒரு உயிரினம் அல்லது தாவரத்தின் மரபணுக்களை முற்றிலும் அறிந்து கொள்வது அதன் வளர்ச்சி, உற்பத்தியை பெருக்க துணை செய்யும். இப்படி முற்றிலும் மரபணுக்கள் அறியப்பட்ட தாவரங்களின் பட்டியலில் தற்போது கோதுமையும் சேர்ந்துள்ளது. கோதுமையின் மரபணுக்கள் மனிதனைவிட 5 மடங்கு பெரிதாகவும், சிக்கலானதாகவும் இருந்தது.
கோதுமை மரபணுக்களை பட்டியலிடுவது சவாலான பணியாக இருந்தது. உலகம் முழுவதும் 20 நாடுகளைச் சேர்ந்த 200 விஞ்ஞானிகள் குழுவினர் இந்த சவாலை விடுவிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். அவர்கள் தங்கள் ஆராய்ச்சிக்கு ஹெர்குலியன் சவால் என்று பெயரிட்டனர். தற்போது அவர்கள் அந்த சவாலில் வெற்றி பெற்றுள்ளனர். ஆராய்ச்சியின் பயனாக தற்போது கோதுமையின் மரபணுக்கள் மொத்தமாக வகையிடப்பட்டு உள்ளது.
எதிர்கால மனிதர்களின் உணவுத் தேவையை ஈடு செய்ய, கோதுமையை தேவைக்கேற்ப உற்பத்தி செய்ய, ஊட்டம் நிறைந்த புதிய கோதுமையை உருவாக்க இந்த மரபணு பட்டியல் உதவும். மரபணு மாற்றங்கள் மனிதர்களுக்கு நன்மை பயக்கும் வகையிலும், பஞ்சமில்லாமல் பசியாற்றும் வகையிலும் இருந்தால் சரிதான்!