பெண்களை குறிவைக்கும் ‘டிராக்கிங்’ செயலி
நம்மை எப்போதும் அச்சத்திலேயே ஆழ்த்தி, அழுத்தி வைத்து இருக்கும் ஸ்மார்ட்போன் யுகம் இது.
கவர்ச்சியான பெயரை சுமக்கும் இந்த ஸ்மார்ட்போன்களால் மகிழ்ச்சி ததும்பிய பல இல்லங்கள் நிம்மதியை இழந்து தவிக்கின்றன. பல தம்பதியினர் மகிழ்ச்சியை தொலைத்து தேடிக்கொண்டு இருக்கிறார்கள். குழந்தைகள் முதல் முதியோர் வரை யாரிடமும் குதூகலம் இல்லை.
காரணம் நன்மைகளை அள்ளித்தரும் ஸ்மார்ட்போன்கள்தான், கூடவே தீமைகளையும் அன்பளிப்பாக வழங்குகின்றன. அனைத்தும் அறிந்தும் ஸ்மார்ட்போன்கள் இல்லாமல் யாரும் இல்லை. அதை சரியாக பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் சொற்பமாகவே இருக்கிறது.
ஸ்மார்ட்போன்களை பல வழிகளில் தவறாக பயன்படுத்த முடியும். குறிப்பாக பெண்களின் அந்தரங்கங்களை வெளிச்சம்போட்டு காட்டும் செயலிகள் (ஆப்) கயவர்கள் பலரால் பயன்படுத்தப்படுகின்றன. இக்கயவர்களின் குறிக்கு சிறுமிகள், பள்ளி, கல்லூரி மாணவிகள், இல்லத்தரசிகள் என யாரும் விதிவிலக்கல்ல.
தங்களை அறியாமலே கயவர்களுக்கு சில பெண்கள் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்துவிடுகிறார்கள். அவர்கள் ஆபத்தை உணராமல் தங்களின் ரகசிய புகைப்படங்களை, வீடியோக்களை செல்போன்களில் வைத்திருக்கிறார்கள். சிலர் தங்களின் காதலனுக்காக ரகசிய புகைப்படம், வீடியோக்களை எடுக்கிறார்கள். தம்பதியினர் சிலரும் தங்களின் அந்தரங்கங்களை செல்போனில் பதிவு செய்து வைத்திருக்கிறார்கள்.
இதுதான் பேராபத்தை விளைவித்துவிடுகிறது. அதாவது செல்போனில் உள்ள புகைப்படங்கள், வீடியோக்கள், தகவல்கள் என எதையும் வெளியில் இருந்து ஒருவரால் பார்க்க முடியும். இதற்கு எமன் வடிவில் வந்திறங்கும் ‘டிராக்கிங்’ செயலிகள் துணை நிற்கின்றன.
ஒருவருக்கு தெரியாமல் அவருடைய ஸ்மார்ட்போனில் இந்த செயலிகளை பதிவிறக்கம் செய்து செயல்பாட்டுக்கு கொண்டுவந்துவிட்டால் போதுமானது. எங்கிருந்து வேண்டுமானாலும் அந்த செல்போனின் செயல்பாடுகளை உளவு பார்க்க முடியும். இது பெண்களுக்கு பேராபத்தை தேடித்தந்துவிடும்.
அதாவது, செல்போன் உரையாடல்களை ஒட்டுக்கேட்க முடியும். வாட்ஸ்-அப் உரையாடல்களை பார்க்கலாம். புகைப்படங்கள், வீடியோக்களை பார்க்க முடியும். பெண்ணுக்கு தெரியாமல் அவரின் செல்போன் கேமராவை இயக்கி அவரை ரகசியமாக படம் பிடிக்க முடியும். படுக்கை அறை காட்சிகளை, உடை மாற்றும் காட்சிகளை கயவர்களால் எங்கிருந்தோ பதிவு செய்ய முடியும்.
கொடுமை என்னவென்றால், ஒரு செல்போனில் இந்த செயலியை பொருத்தி இருந்தால், அதை கண்டுபிடிப்பதும் கடினம். அது வேறு தோற்றத்தில் செல்போனில் நிறுவப்படும். இந்த உளவு செயலி கிட்டத்தட்ட நம் செல்போனில் இருக்கும் ‘கால்குலேட்டர்’ மாதிரிதான் இருக்கும். இதனால் யாரும் எளிதில் சந்தேகம் அடையமுடியாது.
இன்னொருவரின் செல்போனில் இந்த செயலியை ‘இன்ஸ்டால்’ செய்யும் கயவர் கூட்டம், அதற்காக பயன்படுத்திய ஒரு ரகசிய குறியீட்டு எண்ணை கொண்டு மாஸ்டர் உளவு செயலியில் இருந்து சம்பந்தப்பட்ட செல்போனை தங்களின் முழு கட்டுப்பாட்டுக்கு கொண்டுவர முடியும்.
சமீபத்தில் கூட ‘டிராக் வியூ’ என்னும் செயலியை ஒருவன் 100-க்கும் மேற்பட்ட பெண்களின் ஸ்மார்ட்போன்களில் ரகசியமாக இன்ஸ்டால் செய்து அப்பெண்களின் குளியல் காட்சிகள், படுக்கையறை காட்சிகள் மற்றும் உடை மாற்றும் காட்சிகளை ரகசியமாக படம் பிடித்த அதிர்ச்சி தகவல்களை செய்திகளில் படித்து இருப்போம்.
அந்த ஆபாச படங்கள் மூலம் பல பெண்களை மிரட்டி, தனது இச்சைக்கு இணங்க வற்புறுத்தியதும், பயந்துபோய் பலர் அவன் விரித்த வலையில் வேறு வழியின்றி வீழ்ந்ததையும் மறந்திருக்க முடியாது. இதில் கொடுமை என்னவென்றால், அவன் தனது அக்கா உறவுமுறை கொண்ட பெண்ணின் அந்தரங்கத்தையும் படம்பிடித்து இருக்கிறான். காமம் அவன் கண்ணை மறைத்துவிட்டது.
இந்த நிகழ்வு ஸ்மார்ட்போன் யுகத்தில் பெண்களுக்கு அடிக்கப்பட்டு இருக்கும் எச்சரிக்கை மணி. இதுபோன்ற காம கயவர்கள் உறவினர், பக்கத்து வீட்டுக்காரர், நண்பர்கள் என எந்த முகமூடிக்குள்ளும் பதுங்கி இருக்கலாம். எனவே, ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் பெண்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். அவர்களுக்கு போதிய அறிவுரைகளை பெற்றோர் வழங்க வேண்டும்.
ஆபாச இணையதளங்களில் அந்தரங்க படங்களுக்கு அதிக மவுசு இருப்பதால், பெண்கள் விழிப்போடு இருக்க வேண்டியது அவசியம். சமூகவலைத்தளங்களில் தங்களின் புகைப்படங்களை முகப்பு படமாக வைப்பதையும், தங்கள் படங்களை பதிவு செய்வதையும் தவிர்ப்பது நல்லது. இல்லையென்றால், அந்த படங்களை பதிவிறக்கி மார்பிங் செய்து ஆபாச இணையதளங்களுக்கு விற்றுவிடும் ஆபத்தும் உள்ளது.
இதுபோன்ற ஆபத்துகளில் இருந்து பெண்கள் தப்பிக்க வேண்டுமானால், முதலில் தங்களின் செல்போன்களை வேறு எந்த நபரையும் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது. தங்களின் இ-மெயில் முகவரி மற்றும் பாஸ்வேர்டை யாரிடமும் கண்டிப்பாக தெரிவிக்கக்கூடாது. தெரிவித்தால், அதை தெரிந்த நபர்கள் இணையதளத்தில் நீங்கள் என்ன செய்தீர்கள்? என்ன செய்துகொண்டு இருக்கிறீர்கள் என்பதை பார்க்க முடிவும்.
மேலும், தங்களை ஆபாசமாக புகைப்படம், வீடியோ எடுக்கவோ, அவற்றை யாருக்கும் பகிரவோ கூடாது.
உங்கள் செல்போன் வழியாக யாரோ உங்களை கண்காணிப்பதாக சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது பழுது ஏற்படும்போது செல்போன் கடையில் கொடுத்து பழுது சரி செய்து வாங்கிய பின்னர் செல்போனில் ஏதேனும் ரகசியமாக இணைக்கப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகம் ஏற்பட்டாலோ, ஒருமுறை ‘பேக்டரி ரீசெட்’ செய்வது நல்லது. அப்போதுதான் தேவையில்லாத ஆபத்துகளில் இருந்து பெண்கள் தப்பிக்க முடியும்.
அதே போல, பெண்கள் ஸ்மார்ட்போனில் உள்ள பாதுகாப்பு அம்சங்களை எவ்வாறு கையாளுவது என்பது தொடர்பான விளக்கங்களை அறிந்து கொண்டு செல்போனை பயன்படுத்தினால் பெரும்பாலான பிரச்சினைகளில்இருந்து விடுபடலாம்.
- க.தர்மராஜ்,
தகவல் தொழில்நுட்ப செயற்பாட்டாளர்