மதகடிப்பட்டில் வங்கி ஏ.டி.எம். எந்திரத்தில் ரூ.2 லட்சம் திருடிய ஊழியர் கைது

மதகடிப்பட்டில் வங்கி ஏ.டி.எம். எந்திரத்தில் ரூ.2 லட்சத்தை நண்பர் மூலம் திருடிய ஊழியரை போலீசார் கைது செய்தனர். அவரது நண்பரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2018-08-20 00:19 GMT

திருபுவனை,

புதுச்சேரி பகுதியில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம். மையங்களில் தனியார் செக்யூரிட்டி நிறுவனம் மூலம் பணம் நிரப்பப்பட்டு வருகிறது. கடந்த மாதம் புதுச்சேரி – விழுப்புரம் சாலையில் திருபுவனை, மதகடிப்பட்டு உள்ளிட்ட 10–க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள வங்கி ஏ.டி.எம். எந்திரத்தில் லட்சக்கணக்கில் பணம் நிரப்பப்பட்டது.

இந்த நிலையில் மதகடிப்பட்டு ஏ.டி.எம். எந்திரத்தில் 1 லட்சத்து 91 ஆயிரம் ரூபாய் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்டது. இதுபற்றி புதுவையில் உள்ள தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தின் நிர்வாகி வெங்கடாசலபதியின் செல்போனுக்கு குறுஞ்செய்தி சென்றது. இதையடுத்து மும்பையில் உள்ள தலைமை அலுவலகம் மூலம் மதகடிப்பட்டு ஏ.டி.எம். எந்திரத்தை ஆய்வு செய்தபோது, ஏ.டி.எம். எந்திரத்தின் ரகசிய எண்ணை பயன்படுத்தி பணம் எடுக்கப்பட்டது தெரியவந்தது.

உடனே இதுபற்றி போலீஸ் சூப்பிரண்டு குணசேகரனிடம், வெங்கடாசலபதி புகார் செய்தார். இதையடுத்து, தனியார் செக்யூரிடடி நிறுவனத்தில் வேலை செய்யும் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை பாண்டூர் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் (வயது 33) மற்றும் ஊழியர்களிடம் போலீசார் விசாரித்தனர். இதில் வெங்கடேசன் மீது சந்தேகம் ஏற்பட்டது.

அவரிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன், சப்–இன்ஸ்பெக்டர் பிரியா ஆகியோர் விசாரணை நடத்தியதில், முன்னுக்குப்பின் முரணாக அவர் பதில் கூறினார். இதையடுத்து அவரை போலீஸ் நிலையம் அழைத்துவந்து விசாரித்தபோது, பணம் திருடியதை ஒப்புக்கொண்டார்.

வெங்கடேசனின் நண்பர் தியாகதுருகத்தை சேர்ந்த வினோத் (33) மினி வேன் வாங்க பணம் தேவைப்படுவதாக கூறியுள்ளார். இதையடுத்து நண்பனுக்கு உதவி செய்ய அவர் முடிவு செய்தார். சம்பவத்தன்று வெங்கடேசன், தனக்கு தெரிந்த ரகசிய எண்ணை வினோத்திடம் கூறி, மதகடிப்பட்டில் உள்ள வங்கி ஏ.டி.எம். எந்திரத்தை திறந்து பணத்தை எடுக்க சொல்லி இருக்கிறார். அதன்பேரில் வினோத், அந்த ரகசிய எண்ணை பயன்படுத்தி எ.டி.எம். எந்திரத்தை திறந்து 1 லட்சத்து 91 ஆயிரம் ரூபாயை எடுத்து, வெங்கடேசனிடம் கொடுத்தார். இதில் ரூ.10 ஆயிரத்தை வினோத்திடம் அவர் கொடுத்தது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து வெங்கடேசனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. அவரது நண்பர் வினோத்தை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்