நெல்லை அருகே தனியார் காகித ஆலையில் பயங்கர தீ விபத்து

நெல்லை அருகே தனியார் காகித ஆலையில் நேற்று ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் ரூ.18 கோடி பொருட்கள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து தீ எரிந்து வருவதால், தீயை கட்டுக்குள் கொண்டுவர தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.

Update: 2018-08-19 22:00 GMT
பேட்டை, 


நெல்லை பேட்டையை அடுத்த வடுகன்பட்டியில் தனியார் காகித ஆலை உள்ளது. இந்த ஆலையில் நேற்று மதியம் பழைய காகிதங்கள் குவித்து வைக்கப்பட்டிருந்த இடத்தில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. தீ மளமளவென பக்கத்தில் உள்ள பகுதிகளிலும் பரவி எரிந்தது. தகவல் அறிந்த பேட்டை, பாளையங்கோட்டை, சேரன்மாதேவி, ஆலங்குளம் பகுதியில் இருந்த 5 தீயணைப்பு வண்டிகளில் வீரர்கள் விரைந்து சென்று தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும், 5 பொக்லைன் எந்திரங்கள் மற்றும் டிராக்டர்கள் மூலம் தீ மேலும் பரவாமல் தடுத்திடும் வகையில் பழைய காகிதங்களை அப்புறப்படுத்தி வருகின்றனர். அதேசமயம் ஆலை வளாகத்தில் குவித்து வைக்கப்பட்டு உள்ள 2 ஆயிரத்து 100 டன் பழைய காகித குவியலில் தொடர்ந்து தீ எரிந்து வருகிறது.

இன்று அதிகாலை வரை தீ முழுமையாக அணைக்கப்படவில்லை. தொடர்ந்து தீ எரிந்து வருவதால், தீயணைக்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தீவிபத்தில் ரூ.18 கோடி மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த தீவிபத்து குறித்து சீதபற்பநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்