ஏரல் தரைமட்ட பாலம் மீண்டும் அரித்து செல்லப்பட்டது

தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், ஏரல் தரைமட்ட பாலம் மீண்டும் அரித்து செல்லப்பட்டது.

Update: 2018-08-19 21:45 GMT
ஏரல், 

நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த பலத்த மழையால் பெரும்பாலான அணைகள் நிரம்பின. இதனால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. தாமிரபரணி ஆற்றின் கடைசி தடுப்பணையான ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையை தாண்டி விழுந்து ஆர்ப்பரித்து செல்லும் தண்ணீரானது ஏரல், ஆத்தூர் வழியாக புன்னக்காயல் கடலில் சங்கமிக்கிறது.

ஏரலில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே பழமைவாய்ந்த தரைமட்ட தாம்போதி பாலம் உள்ளது. கடந்த 2015, 2016-ம் ஆண்டுகளில் தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், ஏரல் தரைமட்ட தாம்போதி பாலத்தின் நடுவில் அரித்து செல்லப்பட்டது. வெள்ளம் வடிந்த பின்னர், பாலம் அரித்து செல்லப்பட்ட இடத்தில் ஜல்லி கற்கள் மற்றும் சரள் மண்ணை நிரப்பி சீரமைத்தனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் ஏரல் தரைமட்ட தாம்போதி பாலத்தை வெள்ளம் மூழ்கடித்து சென்றது. இதனால் அதன் அருகில் உள்ள உயர்மட்ட பாலத்தின் வழியாகவே அனைத்து வாகனங்களும் செல்கின்றன. ஆற்றில் தண்ணீரின் அளவு சற்று குறைவாக சென்றது. அப்போது தரைமட்ட பாலத்தில் ஏற்கனவே சேதம் அடைந்த பகுதி மீண்டும் வெள்ளத்தில் அரித்து செல்லப்பட்டது தெரிய வந்தது. எனவே ஏரல் தரைமட்ட தாம்போதி பாலத்தில் வெள்ளம் அரித்து சென்ற பகுதியை காங்கிரீட் கலவையால் முறையாக சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர். 

மேலும் செய்திகள்