விவசாயி கொலை வழக்கில் தொழிலாளி கைது

சின்னமனூர் அருகே விவசாயி கொலை செய்யப்பட்ட வழக்கில் தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-08-19 21:30 GMT
சின்னமனூர்,

சின்னமனூரை அடுத்த ஓடைப்பட்டி பழைய போலீஸ் நிலையம் அருகே வசித்து வந்தவர் சுருளி என்ற மகாராஜன் (வயது 63). விவசாயி. கடந்த 17-ந்தேதி தோட்டத்திற்கு மோட்டார்சைக்கிளில் சென்ற மகாராஜனை மர்மநபர் வழிமறித்து அரிவாளால் வெட்டிக்கொன்றார்.

இது குறித்து ஓடைப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலை நடந்த இடத்தில் இருந்து ரேஷன்கார்டு, ஆதார் அடையாள அட்டை ஆகியவற்றை கைப்பற்றினர். இதில் அவை, மூர்த்திநாயக் கன்பட்டியை சேர்ந்த தொழிலாளியான பெருமாள் (41) என்பவருடையது என தெரியவந்தது. இதையடுத்து பெருமாளை போலீசார் தனிப்படை அமைத்து தேடிவந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்த அவரை ஓடைப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அழகுராஜா பிடித்து விசாரணை மேற்கொண்டார்.

விசாரணையில் பெருமாள் தோட்டத்திற்கு மோட்டார்சைக்கிளில் சென்ற போது வழிமறித்து அவரை அரிவாளால் வெட்டியதாகவும், தப்பி ஓடும்போது சட்டை பாக்கெட்டில் இருந்த ரேஷன்கார்டு, ஆதார் அட்டை ஆகியவை கீழே விழுந்து விட்டதாகவும் கூறினார். போலீசாரின் விசாரணையின் போது கொலைக் கான காரணம் குறித்து பெருமாள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். இதையடுத்து பெருமாளை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்