லாரி மீது அரசு பஸ் மோதல்; 5 பேர் படுகாயம்
விக்கிரவாண்டி அருகே லாரி மீது அரசு பஸ் மோதிய விபத்தில் 5 பேர் படுகாயமடைந்தனர்.
விக்கிரவாண்டி,
சென்னையில் இருந்து நேற்று முன்தினம் இரவு அரசு பஸ் ஒன்று பயணிகளுடன் நெல்லை மாவட்டம் செங்கோட்டை நோக்கி புறப்பட்டது. பஸ்சை நெல்லை மாவட்டம் சிவகிரியை சேர்ந்த மகேந்திரபிரபு(வயது 34) என்பவர் ஓட்டினார். கண்டக்டராக நெல்லை கரிக்குளத்தை சேர்ந்த சுந்தர்ராஜ்(38) என்பவர் பணியில் இருந்தார். அந்த பஸ் விக்கிரவாண்டி அடுத்த வி.சாலை என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது, முன்னால் சென்ற டிப்பர் லாரி ஒன்று திடீரென வலதுபுற சாலையில் திரும்பியது. இதனால் அதிர்ச்சியடைந்த டிரைவர், பஸ்சை பிரேக் போட்டு நிறுத்த முயன்றார். அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் எதிர்பாராதவிதமாக லாரி மீது மோதியது.
இதில் பஸ் டிரைவர் மகேந்திரபிரபு, கண்டக்டர் சுந்தர்ராஜ் மற்றும் பயணிகள் 3 பேர் உள்பட 5 பேர் படுகாயமடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்த விக்கிரவாண்டி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் வெங்கட்ராமன், கலியமூர்த்தி ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, விபத்தில் பலத்த காயமடைந்த 5 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதற்கிடையே விபத்துக்குள்ளான லாரி மற்றும் அரசு பஸ்சை போலீசார் கிரேன் மூலம் அப்புறப்படுத்தினார்கள்.
மேலும் இந்த சம்பவம் குறித்து பஸ் கண்டக்டர் சுந்தர்ராஜ் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.