கேரளாவை தேசிய பேரிடர் பாதிப்பு மாநிலமாக அறிவிக்க வேண்டும், எஸ்.டி.பி.ஐ. கட்சி தலைவர் பேட்டி
கேரளாவை தேசிய பேரிடர் பாதிப்பு மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் திருப்பூரில் கூறினார்.
திருப்பூர்,
எஸ்.டி.பி.ஐ. கட்சியின் திருப்பூர் மாவட்ட தலைமை அலுவலகத்தின் திறப்பு விழா நேற்று காலை திருப்பூர் பெரியகடை வீதியில் நடைபெற்றது. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமை அலுவலகத்தை திறந்து வைத்தார். திருப்பூர் மாவட்ட தலைவர் அபுதாகீர், பொதுச்செயலாளர் ஹாரிஸ் பாபு, செயலாளர் இஸ்மாயில், பொருளாளர் ஜபார் சாதிக் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் நிருபர்களிடம் கூறியதாவது:–
ஜி.எஸ்.டி.யில் இருந்து பனியன் தொழிலுக்கு விலக்கு அளிக்க வேண்டும். கேரள மாநிலத்தில் வெள்ளத்தால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மீட்பு பணிக்கு ஹெலிகாப்டர்கள், படகுகள் போதுமான அளவு இல்லை என்று கேரள முதல்வர் தெரிவித்து இருக்கிறார்.
எனவே மத்திய அரசு தேவையான மீட்பு பணிகளை உடனடியாக செய்ய வேண்டும். கேரள மாநிலத்தை தேசிய பேரிடர் பாதிப்பு மாநிலமாக அறிவிக்க வேண்டும். எஸ்.டி.பி.ஐ. கட்சியை சேர்ந்த 10 ஆயிரம் பேர் கேரளாவில் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் இருந்து ரூ.50 லட்சம் மதிப்பில் நிவாரண பொருட்கள் சேகரிக்கப்பட்டு அனுப்பி வைக்க உள்ளோம்.
திருப்பூர் மாவட்டத்தில் முஸ்லிம் மக்களின் வழிபாட்டு தலமான பள்ளிவாசல்களை கட்டுவதற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு விதிமுறைகளை காரணம் காட்டி அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
இவ்வாறு அவர் கூறினார்.