பல்லடம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 தலைமுறையினர் சந்திப்பு: பிளாஸ்டிக்கை பயன்படுத்த மாட்டோம் என உறுதிமொழி ஏற்பு
பல்லடம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 தலைமுறையினர் சந்தித்துக்கொண்டனர். அப்போது பிளாஸ்டிக்கை பயன்படுத்த மாட்டோம் என்று உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.
பல்லடம்,
அவசர உலகத்தில் உலவிக்கொண்டிருக்கும் மனித சமுதாயம் பொருளாதார தேடலுக்கே வாழும் காலத்தை இழந்து விடுகிறது. இந்தநிலையில் சொந்தங்களை பார்ப்பது என்பது அரிதான விஷயமாகவே மாறி வருகிறது. சொல்லப்போனால் உறவுகளை துறந்து வரும் மனித சமுதாயத்தில், ஒற்றுமை என்பது கேள்விக்குறியாகி விட்டது. சகோதரர்களே சொத்துக்காக தங்களுக்குள் தாக்குதல்களை நடத்தும் நிலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. அது மட்டுமா? கூட்டுக்குடும்பம் என்ற நிலை மாறி தனிக்குடித்தனம் போகும் நிலைமை வந்து விட்டது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் பல்லடம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 தலைமுறை உறவுகள் இன்னும் ஒற்றுமையாய் இருந்து வருவதும், அவர்கள் அனைவரும் ஆண்டுக்கு ஒருமுறை சந்தித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதும் தொடர்ந்து வருகிறது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பருவாயை சேர்ந்தவர் நாச்சிமுத்து கவுண்டர். சுதந்திர போராட்ட தியாகி. இவருடைய மனைவி திருமாத்தாள். இவர்களுக்கு பழனிசாமி, சுப்பையன் ஆகிய 2 மகன்களும், ராமாத்தாள், சுப்பாத்தாள், உண்ணாத்தாள், பழனாத்தாள் மற்றும் வள்ளியாத்தாள் என 5 மகள்களும் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணமாகி விட்டது.
தற்போது குடும்பத்தில் மூத்த உறுப்பினர்களாக ராமாத்தாள் கணவர் முத்துக்கவுண்டர் (வயது 95), சுப்பாத்தாள் (87) இவருடைய கணவர் சின்னுக்கவுண்டர் (89), உண்ணாத்தாள் (83), பழனாத்தாள் (77) ஆகியோர் உள்ளனர். இந்த நிலையில், நாச்சிமுத்துகவுண்டர்–திருமாத்தாளின் 5–வது தலைமுறையாக எள்ளு பேரன், பேத்திகள் 18 பேர் உள்பட வாரிசுகளாக மொத்தம் 137 பேர் உள்ளனர். இவர்கள் அனைவரும் பல்வேறு ஊர்களில் பல்வேறு தொழில்கள் செய்து வருகிறார்கள். இவர்களில் சிலர் வெளிநாடுகளிலும் வசித்து வருகிறார்கள். இதற்கிடையில் இவர்கள் அனைவரும் ஒவ்வொரு ஆண்டும் சந்திக்க முடிவு செய்தனர்.
அதன்படி கடந்த ஆண்டு சந்தித்த அவர்கள், இந்த ஆண்டு பருவாய் கிராமத்தில் உள்ள பூர்வீக விவசாய தோட்டத்தில் சந்தித்துக்கொண்டனர். இதில் 80–க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். அப்போது ஒவ்வொருவரும் நலம் விசாரித்துக்கொண்டனர். பின்னர் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. பின்னர் அனைவருக்கும் தானியங்கள், கீரை, காய்கறி உள்ளிட்ட சைவ உணவால் கிடைக்கும் நன்மைகளை விளக்கி அறுசுவை விருந்து பரிமாறப்பட்டது. இந்த குடும்பத்தினர் தங்களுக்குள் வாட்ஸ்–அப் மூலமாக குடும்ப தகவல்களை தினமும் பகிர்ந்து கொள்கிறார்கள்.
இந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஜெர்மனி, அமெரிக்கா, தென்கொரியா ஆகிய நாடுகளிலும் வசித்து வருகிறார்கள். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அவர்கள் அங்கிருந்து வந்தனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் ‘பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த மாட்டோம்‘ என்று உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். பின்னர் அனைவரும் சேர்ந்து தங்கள் சந்திப்பை வருங்காலத்தில் நினைவுகூர்வதற்காக புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.