மாணவி குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டல்

பள்ளிகொண்டா அருகே பள்ளி மாணவி குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டிய டெய்லரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-08-19 22:19 GMT
அணைக்கட்டு, 


இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 16 வயது மாணவி அந்த பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். மாணவி நேற்று காலை அவரது வீட்டில் மேற்கூரை இல்லாத குளியலறையில் குளித்துக் கொண்டிருந்தார்.

அதனை அப்பகுதியை சேர்ந்த ஒருவர், அருகே உள்ள மாடியில் நின்று செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். பின்னர் அவர், அதனை மாணவியின் தாயாருடைய செல்போன் ‘வாட்ஸ்-அப்’பிற்கு அனுப்பி உள்ளார். இதைக்கண்டு மாணவியின் தாயார் கடும் அதிர்ச்சி அடைந்தார்.

அதையடுத்து சிறிது நேரத்தில் அந்த நபர், மாணவியின் தாயாரை செல்போனில் தொடர்பு கொண்டார். அப்போது அவர், “உனது மகள் குளிக்கும் படத்தை அழிக்க வேண்டும் என்றால் பணம் கொடுக்க வேண்டும், மேலும் இதுகுறித்து குடும்பத்தினர், போலீஸ் உள்பட யாருக்கும் தெரிவிக்க கூடாது.
அவ்வாறு தெரிவித்தால் வீடியோவை ‘வாட்ஸ்-அப்’, ‘முகநூல்’ உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன்” என மிரட்டி உள்ளார். மேலும் பணத்தை உடனடியாக தாம் தெரிவிக்கும் இடத்துக்கு வந்து கொடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

அதனால் செய்வது அறியாமல் திகைத்த மாணவியின் தாயார், சிறிது நேரத்துக்கு பின்னர் பள்ளிகொண்டா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி வழக்குப்பதிந்தார். பின்னர் அவர் சம்பந்தப்பட்ட இடத்துக்கு சென்று தீவிர விசாரணை நடத்தினார். அதில், வீடியோ அனுப்பியவர் அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் (வயது 32) என்பதும், அவர் அப்பகுதியில் டெய்லராக இருப்பதும் தெரிய வந்தது.
இதையடுத்து மணிகண்டனை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரது செல்போனை பறிமுதல் செய்து மாணவி குளிக்கும் வீடியோவை போலீசார் அழித்தனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்