கேரள மாநிலத்திற்கு ரூ.63½ லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள்
பலத்த மழையால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்துக்கு திருவண்ணாமலையில் இருந்து ரூ.63½ லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.;
திருவண்ணாமலை,
கேரள மாநிலத்தில் பலத்த மழையின் காரணமாக மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் தமிழக அரசு மூலமும், தமிழகத்தில் உள்ள பல்வேறு நிறுவனங்கள், அமைப்புகள், பள்ளி, கல்லூரிகள் போன்றவற்றின் மூலமும் நிவாரண பொருட்கள் சேகரிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்திலும் பல்வேறு நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள், அமைப்புகள் சார்பில் நிவாரண பொருட்கள் சேகரிக்கப்பட்டன. அந்த பொருட்கள் நேற்று திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகத்தின் மூலம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து லாரிகள் மூலம் கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
நிவாரண பொருட்கள் ஏற்றி செல்லும் லாரிகளை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி அனுப்பி வைத்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
பலத்த மழையால் பாதிக்கப்பட்டு உள்ள கேரள மாநில மக்களுக்கு உதவும் வகையில் நிவாரண பொருட்கள் சேகரிக்கப்பட்டு 6 லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. இதில் அரிசி, துவரம் பருப்பு, பிஸ்கெட், கடலை உருண்டை, மளிகை பொருட்கள், துணி வகைகள், மெழுகுவர்த்தி, தீப்பெட்டி, மருந்து வகைகள், பேட்டரி, டார்ச்லைட் போன்றவை அனுப்பி வைக்கப்பட்டது.
இதன் மதிப்பு ரூ.63 லட்சத்து 43 ஆயிரத்து 993 ஆகும். இந்த பொருட்கள் கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து மக்களுக்கு பிரித்து வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ஜானகி, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் உமாமகேஸ்வரி, திருவண்ணாமலை உதவி கலெக்டர் தங்கவேல், மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் செந்தில்குமார் மற்றும் அரசு அலுவலர்கள், சமூக ஆர்வலர்கள் உடனிருந்தனர்.