நிலம் கையகப்படுத்துவதில் தொடரும் சிக்கல் புல்லட் ரெயில் திட்ட பணிகளை 2 கட்டமாக மேற்கொள்ள முடிவு
மராட்டியத்தில் நிலம் கையகப்படுத்துவதில் தொடரும் சிக்கல் காரணமாக புல்லட் ரெயில் திட்ட பணிகளை 2 கட்டமாக மேற்கொள்ள தேசிய அதிவேக ரெயில் கழகம் திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.;
மும்பை,
மராட்டியத்தில் நிலம் கையகப்படுத்துவதில் தொடரும் சிக்கல் காரணமாக புல்லட் ரெயில் திட்ட பணிகளை 2 கட்டமாக மேற்கொள்ள தேசிய அதிவேக ரெயில் கழகம் திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
புல்லட் ரெயில் திட்டம்
நாட்டிலேயே முதன் முறையாக புல்லட் ரெயில் திட்டம் மராட்டிய மாநில தலைநகர் மும்பை- குஜராத் மாநிலம் ஆமதாபாத் ஆகிய நகரங்களுக்கு இடையே 508 கி.மீ. தூரத்துக்கு செயல் படுத்தப்படுகிறது. இந்த புல்லட் ரெயில் திட்டப்பணிகளை தேசிய அதிவேக ரெயில் கழகம் மேற்கொள்கிறது.
தற்போது இந்த திட்டத் துக்காக நிலம் கையகப்ப டுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. புல்லட் ரெயில் திட்டத்துக்கு வருகிற டிசம்பர் மாதத்துக்குள் நிலம் கையகப்படுத்த திட்டமிடப் பட்டு இருந்தது.
நிலம் கையகப்படுத்துவதில் தொய்வு
ஆனால் மராட்டியத்தில் 108 கிராமங்கள் வழியாக செயல்படுத்தப்படும் புல்லட் ரெயில் திட்டத்துக்கு அதிகளவில் விவசாய விளை நிலங்கள் கையகப்படுத்த வேண்டி உள்ளது. இதற்கு தானே மற்றும் பால்கர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதனால் மத்திய அரசு திட்டமிட்டது போன்று டிசம்பர் மாதத்திற்குள் நிலத்தை கையகப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
2 கட்டமாக...
இதன் காரணமாக புல்லட் ரெயில் திட்டத்தை இரண்டு கட்டங்களாக மேற்கொள்ள தேசிய அதிகவேக ரெயில் கழகம் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதன்படி குஜராத்தில் முதல் கட்டப்பணிகள் தொடங்க உள்ளது. இதில் ஆமதாபாத் முதல் பிலிமோரோ வரை புல்லட் வழித்தடம் மற்றும் புல்லட் ரெயில் நிலையங்களை அமைக்க திட்டமிட்டு இருக்கிறது. அதன்பின்னர் பிலிமோரோ - மும்பை இடையே 2-ம் கட்டமாக பணிகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
மும்பை - ஆமதாபாத் இடையே 2022-ம் ஆண்டு சுதந்திர தினத்தன்று புல்லட் ரெயில் சேவையை தொடங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.