மேலூர் அருகே பாசன கால்வாயை தூர்வாரிய கிராம மக்கள்

மேலூர் அருகே பாசன கால்வாயை தாங்களாகவே கிராம மக்கள் தூர்வாரினர்.

Update: 2018-08-19 21:45 GMT

மேலூர்,

பெரியாறு, வைகை அணை தண்ணீர் மூலம் ஒரு போக பாசன வசதி பெறும் பகுதியாக மேலூர் தாலுகா உள்ளது. அணைக்கட்டு பகுதியில் பலத்த மழை பெய்து வரும் நேரத்தில் மேலூர் பகுதியில் கண்மாய்கள் வறண்டு குடிதண்ணீருக்கு மக்கள் அலையும் நிலை உள்ளது.

பாசன கால்வாய்கள் தூர்வாரப்படாமல் மணல் மேடாக காட்சி அளிக்கிறது.

தற்போது அணைக்கட்டு பகுதியில் பெய்து வரும் மழையினால் மேலூர் பகுதி விவசாயிகள் விவசாயம் செய்ய தயார் நிலையில் கால்வாயில் எப்போது தண்ணீர் திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர். ஒருபோக பாசனத்திற்காக மேலூர் பகுதிக்கு கால்வாயில் தண்ணீர் திறக்க வேண்டும் என்று பெரியபுள்ளான் எம்.எல்.ஏ.வும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 4 ஆண்டுகளாக ஏற்பட்ட வறட்சியினால் மேலூர் பகுதியில் உள்ள பாசன கால்வாய்கள் அனைத்தும் மண் மேடாகிவிட்டன. ஆனால் பொதுப்பணித் துறையினரோ கால்வாய்களை சுத்தம் செய்யாமல் உள்ளனர்.

இந்நிலையில் வெள்ளலூர்நாடு குப்பச்சிபட்டி கிராமத்தில் கண்மாய்க்கு நீர் வரும்

கால்வாய்களை அக்கிராம மக்கள், இளைஞர்கள் சொந்த முயற்சியில் சுத்தம் செய்ய முடிவு செய்து அவர்களாகவே அப்பகுதியில் உள்ள கால்வாய்களை தூர்வாரி உள்ளனர்.

மேலும் பாசன கால்வாய்களை தூர்வாருவதிலும், பாசனத்துக்கு தண்ணீர் திறப்பதிலும் வெள்ளலூர்நாடு பகுதியை புறக்கணிப்பதாக அப்பகுதி விவசாயிகள் புகார் கூறுகின்றனர். எனவே இந்த ஆண்டு எப்படியும் விவசாயம் செய்யவேண்டும் என்ற ஆர்வத்தில் இருப்பதாகவும் இப்பகுதி விவசாயிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்