ஐ.ஏ.எஸ். அதிகாரி போல நடித்து போலீசாரை மிரட்டிய வாலிபர் கைது

ஐ.ஏ.எஸ் அதிகாரி போல நடித்து போலீசாரை ஏமாற்றிய வாலிபர் கைது செய்யப்பட்டார். அவர் புதுமாடல் கார் வாங்கித்தருவதாக ஏமாற்றியபோது சிக்கினார்.

Update: 2018-08-19 23:00 GMT

திருமங்கலம்,

மதுரை அருகே பெருங்குடி காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர் செல்வம் (வயது 44). இவருடைய மனைவி சத்தியசீலா. இவர் மாவட்ட குற்றப்பிரிவு சப்–இன்ஸ்பெக்டராக உள்ளார். செல்வம் கார் ஏஜென்சி நடத்தி வருகிறார். இவருக்கும் சோழவந்தானை சேர்ந்த செந்தில் (35) என்பவருக்கும் கார் வாங்கி கொடுப்பதில் பழக்கம் ஏற்பட்டு உள்ளது.

இந்நிலையில் செந்தில், புதுமாடல் கார் வாங்கி தருவதாக கூறி செல்வத்திடம் ரூ.7 லட்சம் பெற்று கொண்டு திருமங்கலத்துக்கு வரும்படி கூறியுள்ளார். திருமங்கலம் வந்த செல்வம் சுங்கச்சாவடி அருகே காத்திருந்தார்.

அப்போது செந்தில் கார் இல்லாமல் அங்கு வந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. செந்தில் அருகில் கிடந்த கல்லை எடுத்து செல்வத்தை நோக்கி எறிந்துள்ளார். இதில் கல் மோட்டார் சைக்கிள் மீது விழுந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் செந்திலை பிடித்து விசாரணை செய்தனர். இதில் எம்.பி.பி.எஸ். சீட்டு வாங்கித்தருவதாக கூறி பல லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளதும், ஐ.ஏ.எஸ். அதிகாரி போல நடித்து பல போலீஸ் அதிகாரிகளை மிரட்டி உள்ளதும், ரூ.35 லட்சம் மோசடி செய்த வழக்கில் பாளையங்கோட்டை சிறையில் 6 மாதம் அடைக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்தது.

சில நாட்களுக்கு முன்பு குடிபோதையில் திருமங்கலம் தனியார் ஓட்டலில் ரகளையில் ஈடுபட்டு உள்ளதும், ஐ.ஏ.எஸ். அதிகாரி எனக்கூறி பலரிடம் மோசடி செய்து உள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து வழக்குப்பதிவு செய்து செந்திலை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்