போலீஸ் டி.ஐ.ஜி. அலுவலகம் அருகே நீதிமன்ற பெண் ஊழியரிடம் 6 பவுன் சங்கிலி பறிப்பு

போலீஸ் டி.ஐ.ஜி. அலுவலகம் அருகே நீதிமன்ற பெண் ஊழியரிடம் 6 பவுன் சங்கிலியை பறித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2018-08-19 22:15 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை பழைய வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் சுசிலா(வயது53). இவர் தஞ்சை நீதிமன்றத்தில் எழுத்தராக பணி புரிந்து வருகிறார். இவர் மொபட்டில் தான் நீதிமன்றத்திற்கு சென்று வருவது வழக்கம். சம்பவத்தன்று நீதிமன்ற பணி முடிந்தவுடன் மொபட்டில் வீட்டிற்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தார். நீதிமன்ற சாலையில் ஆயுதப்படை மைதானம் அருகே அவர் சென்றபோது, பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் 2 பேர் திடீரென சுசிலாவின் கழுத்தில் கிடந்த 6 பவுன் சங்கிலியை பறித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், திருடன்... திருடன்... என்று சத்தம்போட்டார். இதை கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வருவதற்குள் மர்மநபர்கள் தப்பி சென்றுவிட்டனர். இது குறித்து தஞ்சை மேற்கு போலீஸ் நிலையத்தில் சுசிலா புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகோபால் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

சங்கிலி பறிப்பு சம்பவம் நடந்த இடத்தின் அருகில் தான் தஞ்சை சரக போலீஸ் டி.ஐ.ஜி. அலுவலகம் உள்ளது. இந்த பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில், சங்கிலியை பறித்து சென்ற மர்மநபர்களின் உருவம் பதிவாகி இருக்கிறதா? என்றும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். 

மேலும் செய்திகள்