சேரம்பாடி அருகே வாழைகளை சேதப்படுத்தி காட்டுயானைகள் அட்டகாசம்

சேரம்பாடி அருகே வாழைகளை சேதப்படுத்தி காட்டுயானைகள் அட்டகாசம் செய்தன.

Update: 2018-08-19 21:16 GMT

பந்தலூர்,

பந்தலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காட்டுயானைகளின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அதிகாலையிலும், இரவு நேரங்களிலும் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சேரம்பாடி அருகே சப்புந்தோடு குழிமூலா பகுதிக்குள் 3 காட்டுயானைகள் புகுந்தன. பின்னர் அங்கு ராஜன் என்பவருக்கு சொந்தமான வாழைத்தோட்டத்திற்குள் அவை நுழைந்தன. தொடர்ந்து அங்கு அறுவடைக்கு தயாரான நிலையில் இருந்த 300 வாழைகளை சேதப்படுத்தி காட்டுயானைகள் அட்டகாசம் செய்தன. இதையடுத்து மீண்டும் அதிகாலையில் அவை வனப்பகுதிக்குள் சென்றன.

இதுகுறித்து சேரம்பாடி வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் வனச்சரகர்(பொறுப்பு) மனோகரன் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, பார்வையிட்டனர். மேலும் சேதமான வாழைகளுக்கு நஷ்டஈடு கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறும்போது, காட்டுயானைகள் ஊருக்குள் புகுவது தொடர் கதையாகிவிட்டது. இதனால் யாருமே வெளியே நடமாட முடியாத நிலை காணப்படுகிறது. எனவே காட்டுயானைகள் ஊருக்குள் புகுவதை தவிர்க்க 24 மணி நேரமும் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்றனர்.

மேலும் செய்திகள்