ஆவணி முதல் ஞாயிற்றுக்கிழமை: நாகராஜா கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது

ஆவணி முதல் ஞாயிற்றுக்கிழமையையொட்டி நாகராஜா கோவிலில் நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றி வழிபட்டனர்.

Update: 2018-08-19 22:30 GMT
நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் நாகர்கோவிலில் உள்ள நாகராஜா கோவிலும் ஒன்று. நாகராஜரை ஞாயிற்றுக்கிழமை வழிபட்டால் நினைத்தது கைகூடும் என்று கூறப்படுவதால் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நாகராஜா கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். அதுவும் ஆவணி மாதத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமைக்கு தனிச் சிறப்பு உண்டு. இதனால் ஆவணி மாத ஞாயிறன்று நாகராஜா கோவிலில் பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை விட மிகவும் அதிகமாக காணப்படும்.

இந்த நிலையில் நேற்று ஆவணி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் நாகராஜா கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதைத் தொடர்ந்து அதிகாலை 4 மணிக்கே கோவில் நடை திறக்கப்பட்டு நாகராஜருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. அதிகாலை பூஜைக்கே பக்தர்கள் குவிந்து விட்டனர். பக்தர்களின் கூட்டத்தை சமாளிப்பதற்காக இருபக்கமும் கம்புகளால் கட்டப்பட்டு பாதை உருவாக்கப்பட்டிருந்தன.

எனவே இதன் வழியாக பக்தர்கள் கோவிலுக்கு சென்று நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். கோவில் வளாகத்தில் அரச மரத்துக்கு அடியில் ஒரு விநாயகர் வீற்றிருக்கிறார். விநாயகர் சன்னதியை சுற்றிலும் நாகர் சிலைகள் அருகருகே வரிசையாக உள்ளன.

இந்த நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றியும், மஞ்சள் வைத்தும் வழிபட்ட பிறகு விநாயகரை வணங்கினால் தோஷம் தீரும் என்று பக்தர்களால் கூறப்படுகிறது. எனவே நேற்று கோவிலில் குவிந்திருந்த பக்தர்கள் நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றியும், மஞ்சள் வைத்தும் வழிபட்டனர்.

பக்தர்கள் கூட்டத்தை கருத்தில் கொண்டு ஏதேனும் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்க நாகராஜா கோவிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. 

மேலும் செய்திகள்