குண்டலுபேட்டையில் மழை வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது; வியாபாரி சாவு குடும்பத்தினருக்கு மந்திரி ஆறுதல்
குண்டலுபேட்டையில் பெய்த மழைக்கு, வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் வியாபாரி பரிதாபமாக இறந்தார்.;
கொள்ளேகால்,
குண்டலுபேட்டையில் பெய்த மழைக்கு, வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் வியாபாரி பரிதாபமாக இறந்தார். அவரின் குடும்பத்தினருக்கு மந்திரி, எம்.பி. நேரில் சென்று ஆறுதல் கூறினார்கள்.
வியாபாரி சாவு
சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டை டவுன் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில தினங்களாக விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தெரக்கனாம்பி கிராமத்தில் மழை பெய்து கொண்டு இருந்தது. அப்போது அந்த கிராமத்தை சேர்ந்த வியாபாரியான நூர்முகமது என்பவர், வீட்டில் இருந்து இயற்கை உபாதையை கழிக்க வெளியே வந்தார். அந்த சந்தர்ப்பத்தில் திடீரென வீட்டின் சுவர் இடிந்து நூர்முகமதுவின் மீது விழுந்தது. இதில் உடல் நசுங்கிய அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அவரின் உடலை பார்த்து குடும்பத்தினரும், உறவினர்களும் கதறி அழுதனர். இந்த காட்சி பார்க்க பரிதாபமாக இருந்தது.
குடும்பத்தினருக்கு ஆறுதல்
இதுகுறித்து தகவல் அறிந்ததும் தெரக்கனாம்பி போலீசார் அங்கு சென்று நூர்முகமதுவின் உடலை கைப்பற்றி விசாரித்தனர். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து தெரக்கனாம்பி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் உயிரிழந்த நூர்முகதுவின் வீட்டிற்கு சாம்ராஜ்நகர் மாவட்ட பொறுப்பு மந்திரி புட்டரங்கஷெட்டி, துருவநாராயண் எம்.பி. ஆகியோர் நேரில் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்கள்.