வாலிபரின் கை துண்டிக்கப்பட்ட வழக்கில் 5 பேர் கைது

வாலிபரின் கை துண்டிக்கப்பட்ட வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2018-08-19 22:30 GMT
பூந்தமல்லி,

திருவள்ளூரை அடுத்த செவ்வாப்பேட்டை போலீசார் கடந்த 13–ந்தேதி பெருமாள்பட்டு  மேம்பாலம் பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டபோது அங்கு ஒருவர்  கை துண்டிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டார். போலீசார் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீஸ் விசாரணையில் கை துண்டானவர் திருவள்ளூரை அடுத்த பெருமாள்பட்டு நேரு நகரை சேர்ந்த தினகரன் என்கிற பால் (வயது 22) என்பது தெரிய வந்தது.

 அவரது வெட்டுபட்ட கை அவர் இருந்த இடத்தில் இருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் கிடந்தது. அதை போலீசார் மீட்டு தினகரனுக்கு பொருத்துவதற்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

 போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில் தனபாலின் கையை துண்டித்ததாக வேப்பம்பட்டு பகுதியை சேர்ந்த சந்தோஷ் என்ற ஜெபராஜ் (24) அவரது நண்பரான அதே பகுதியை சேர்ந்த குமார்(25), தினேஷ் (24), பட்டாபிராமை சேர்ந்த லல்லு என்ற சார்லஸ்ராஜ் (23), திருநின்றவூரை சேர்ந்த குமார் என்ற மோகன்குமார்(19)  ஆகியோரை கைது செய்தனர்.

 விசாரணையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் கைப்பந்து போட்டியில்  தினகரனுடன் ஏற்பட்ட முன்விரோதத்தில் அவரது கையை வெட்டியதாக இவர்கள் 5 பேரும் தெரிவித்தனர். போலீசார் அவர்களிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிள்கள், 2 கத்திகளை கைப்பற்றினர்.

மேலும் செய்திகள்