பெண்களிடம் நகை பறித்த வழக்கில் 2 வாலிபர்கள் கைது

கடலூரில், பெண்களிடம் நகை பறித்த வழக்கில் போலீசாரால் தேடப்பட்ட 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.

Update: 2018-08-19 21:30 GMT

கடலூர், 

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் வெள்ளிமோட்டான் தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவருடைய மனைவி ஜோதி (வயது 19). இவர் நேற்று முன்தினம் அதே பகுதியில் நடந்து சென்ற போது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சென்ற மர்ம நபர்கள் அவர் கழுத்தில் அணிந்திருந்த செயினை பறித்தனர்.

உடன் சுதாரித்த அவர் நகையை பிடித்தார். இதில் பாதி செயின் அவரது கையில் சிக்கிக்கொண்டது. மீதியுள்ள 1 பவுன் செயினை வழிப்பறி கொள்ளையர்கள் பறித்து சென்று விட்டனர்.

இதேபோல் கடலூர் வண்டிப்பாளையம் சாலை மகாலட்சுமிநகரை சேர்ந்த தீனதயாளன் மனைவி அகிலபிரியா(33) என்பவரிடமும் கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் பறித்து சென்று விட்டனர். இதில் 1½ பவுன் நகை பறிபோனது.

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பவுனாம்பாள்நகரை சேர்ந்த ஜெகதாம்பாள்(75) கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியையும் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் பறித்து சென்று விட்டனர். இது பற்றி அவர்கள் தனித்தனியாக கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இதற்கிடையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவின்பேரில் டெல்டா பிரிவு போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையிலான போலீசாரும், குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சந்தேகத்தின் பேரில் 2 பேர் வந்தனர். அவர்களை டெல்டா பிரிவு போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் முன்னுக்கு பின் முரணான தகவலை கூறினர். இதையடுத்து அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்திய போது, அவர்கள் சென்னை புதுவண்ணாரப்பேட்டை ஜீவாநகரை சேர்ந்த குமார் மகன் சுரேஷ் (23), என்றும், சென்னை சுனாமிகுடியிருப்பு சம்பத்குமார் மகன் சுரேஷ்குமார் (29) ஆகிய 2 பேர் என்றும் தெரிய வந்தது.

அவர்களிடம் போலீசார் துருவி, துருவி விசாரணை நடத்தியதில், 2 பேரும் சேர்ந்து திருப்பாதிரிப்புலியூர் பகுதி பெண்ணிடம் நகை பறித்ததை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அவர்கள் 2 பேரையும் டெல்டா பிரிவு போலீசார் திருப்பாதிரிப்புலியூர் போலீசில் ஒப்படைத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3 செல்போன்கள், மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் இந்த வழக்கு தொடர்பாக மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்