தமிழகம் தொழில் தொடங்க தகுதியுள்ள மாநிலம் : தேசிய ஆய்வில் தென்படும் முன்னேற்றம்

என்.சி.ஏ.இ.ஆர். என்ற தேசிய பயன்பாடு மற்றும் பொருளாதார ஆய்வுக் கவுன்சில் சமீபத்தில் மாநில முதலீட்டு சாத்தியக் கூறு குறியீடு - 2018ஐ (என்-எஸ்.ஐ.பி.ஐ.) இம்மாதம் 3-ந் தேதி வெளியிட்டது.

Update: 2018-08-19 12:08 GMT
இந்த ஆய்வை 6 முக்கிய அம்சங்களை முன்வைத்து இந்த கவுன்சில் நடத்தியது. தொழில் தொடங்குவதற்கு இடம் கிடைக்கும் வசதி, தொழிலாளர்கள் இருப்பு, தொழிலுக்கு ஏற்ற உள்கட்டமைப்பு வசதி, பொருளாதார சூழ்நிலை, அரசியல் ஸ்திரத்தன்மை - நிர்வாகத் திறன் மற்றும் இந்த ஆய்வில் தொழில் அதிபர்கள் வழங்கும் பதிலின் தன்மை ஆகியவற்றை அடிப்படையாக வைத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அதில், முதலீட்டை அதிக அளவில் ஈர்க்கும் மாநிலமாக முதல் இடத்தில் பட்டியலிடப்பட்டு இருந்த குஜராத்தை பின்னுக்குத் தள்ளிவிட்டு டெல்லி முதலிடம் பிடித்தது. குஜராத் 3-ம் இடத்துக்கு இறங்கியுள்ளது. இதில் மிகுந்த மகிழ்ச்சிக்கு உரிய தகவல் என்னவென்றால், தமிழகத்துக்கு இரண்டாம் இடம் கிடைத்துள்ளது என்பதுதான். இதுவரை 6-வது இடத்தில் இருந்த தமிழகம், 2-ம் இடத்துக்கு ஏறியிருப்பது இந்த அரசுக்கு மாபெரும் வெற்றிதான். தமிழகம் கடந்த 2016-ம் ஆண்டில் 3-ம் இடத்தையும்; 2017-ம் ஆண்டில் 6-ம் இடத்தையும் பெற்றிருந்தது.

அரசியல் ரீதியான குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க அரசுக்கு இது வாய்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்றாலும், படித்த இளைஞர்களின் வாழ்க்கை பிரகாசமடையச் செய்யும் குறியீடாகவும் இதை எடுத்துக்கொள்ளலாம். இந்த ஆய்வு முடிவின்படி, டெல்லி, தமிழ்நாடு, குஜராத் ஆகிய முதல் 3 மாநிலங்களில் யாரும் தைரியமாக தொழில் தொடங்கலாம் என்பது வெளிப்பட்டுள்ளது. இந்த வரிசையில் அரியானா, மராட்டியம், கேரளா, ஆந்திர பிரதேசம், தெலுங்கானா, கர்நாடகா, மேற்கு வங்காளம், ராஜஸ்தான், பஞ்சாப், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், உத்தரகாண்ட், இமாசலபிரதேசம், ஒடிசா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்கள் வருகின்றன.

இந்தியா முழுவதிலும் வெவ்வேறு அளவில் முதலீட்டைக் கொண்ட உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் சேவை நிறுவனங்கள் உள்பட ஆயிரத்து 49 தொழில் நிறுவனங்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதில் வெளிப்படையாகப் பேசப்பட்ட ஒரு விஷயம், மாநிலத்தின் சட்டம் ஒழுங்குதான். தொழில் தொடங்குவதற்கு இதுதான் ஆரம்பகட்ட தடங்கலாக உள்ளதாக 55 சதவீதம் பேர் கருத்து கூறினர். இதுபோன்ற கருத்துக் கணிப்பை கடந்த 2017-ம் ஆண்டு நடத்தியபோது, தொழில் தொடங்குவதற்கு எதிரான மிகப் பெரிய இடையூறாக இருப்பது லஞ்ச-ஊழல் என்று 57 சதவீதம் பேர் சுட்டிக் காட்டியது நினைவிருக்கலாம். இந்த சர்வேயில் அது 46 சதவீதமாக குறைந்திருக்கிறது ஆச்சரியம்தான்.

மேலும் பல இடையூறுகளையும் அந்த நிறுவனங்கள் சுட்டிக் காட்டியுள்ளன. அதன்படி, நிலத்துக்கான அங்கீகாரத்தைப் பெறுவதில் உள்ள சிக்கல்கள், ஜி.எஸ்.டி.க்கு மாறுவது, திறமையான வேலையாட்கள் கிடைப்பது, தொழிலை தொடங்குவதற்கு முன்பு கிடைக்க வேண்டிய அனைத்து வகை அங்கீகாரங்கள் ஆகியவற்றை அந்த நிறுவனங்கள் சுட்டிக்காட்டி இருக்கின்றன. இவற்றையும் தமிழக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்

இந்த சர்வேயில், நிர்வாகம் - அரசியல் ஸ்திரத்தன்மை (66.6 சதவீதம்), தொழிலாளர்கள் இருப்பு (73.6 சதவீதம்) ஆகிய 2 அம்சங்களில் அனைத்து மாநிலங்களையும் தமிழகம் பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடிக்கிறது. இடவசதி என்ற அம்சத்தை கணக்கிடும்போது தமிழகத்துக்கு 3-ம் இடம் (64.8 சதவீதம்) கிடைத்துள்ளது.

நிர்வாகம் - அரசியல் ஸ்திரத்தன்மை அடிப்படையிலான ஆய்வின்படி, கோர்ட்டு மூலம் வழக்குகளை முடிவுக்குக் கொண்டு வருவதில் முதலிடத்தை தமிழகம் பெறுகிறது. அரசியல் தலைவர்கள் மீதுள்ள குற்ற வழக்குகளின் எண்ணிக்கையில் தமிழகம் 7-ம் இடத்தைப் பெறுகிறது.

தொழிலாளர்கள் இருப்பு பற்றிய ஆய்வில், தொழில்நுட்ப கல்வி பெற்றவர்கள் மற்றும் உற்பத்திப் பிரிவுக்கு தகுதியான ஊழியர்கள் ஆகிய பிரிவுகளில் தமிழகம் இரண்டாம் இடத்தில் வருகிறது. இடவசதி பற்றிய ஆய்வில் பார்த்தால், நிலப் பிரச்சினையால் நின்று போன திட்டங்கள், தொழில் பூங்காக்கள், ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்குதல், தொழிற்சாலைகளுக்கு நிலம் அளித்தல் ஆகியவற்றில் தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டியதுள்ளது.

உள்கட்டமைப்பு வசதிகளை செய்து தருவதில் தமிழகம் முன்னேற்றம் கண்டுள்ளது. இந்த ஆய்வு முடிவில் சற்று கவலையை ஏற்படுத்தும் விஷயம், தமிழகத்தின் பொருளாதார சூழ்நிலைதான். இதில் தமிழ்நாடு 5 இடங்கள் சரிந்து 7வது இடத்தில் இருக்கிறது.

கடந்த 2017-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, அனைத்து அம்சங்களிலுமே முன்னேற்றம் கண்டுள்ள மேற்கு வங்காளம் 11 இடங்கள் முன்னேறி 10-ம் இடத்தைப் பிடித்திருப்பது வியப்பளிக்கும் ஒன்றாகும்.

சட்டம் ஒழுங்கு எப்படி?

இந்தியாவிலேயே அதிக அளவில் போராட்டங்களை சந்தித்து வரும் மாநிலம் தமிழகம்தான். நாடு முழுவதும் நடக்கும் போராட்டங்களைக் கணக்கிட்டால், 15 சதவீத போராட்டங்கள் தமிழகத்தில்தான் நடக்கின்றன. ஒவ்வொரு நாளும் இங்கு சராசரியாக 47 போராட்டங்கள் நடக்கின்றன. ஆனாலும், இந்த போராட்டங்களுக்கு எதிராக போலீசார் மூலம் நடத்தப்படும் பலப்பிரயோகம் 0.5 சதவீதம்தான்.

காவிரி நதிநீர், பூரண மதுவிலக்கு, மீத்தேன், ஹைட்ரோ கார்பன், நீட் தேர்வு, அரசு ஊழியர், செவிலியர் வேலை நிறுத்தம் என பல உணர்வுப்பூர்வமான போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் இவற்றை சட்டம் ஒழுங்கு கெடாமலேயே அரசு திறம்படக் கையாண்டது. தூத்துக்குடி உள்பட சில நேர்வுகளில் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்பட்டதையும் தவிர்க்க முடியாது.

ஆனாலும் தீவிரவாதம், மதவாதம் போன்றவை அடிப்படையிலான சம்பவங்கள் முற்றிலும் இல்லாத நிலையை தமிழகத்தில் அரசு ஏற்படுத்தி இருப்பது சிறப்புதான். இந்த நிலை நீடித்தால் கணிசமான முதலீடுகளை தமிழகம் மேலும் ஈர்க்கும் என்பதில் சந்தேகம் இல்லை. சட்டம் ஒழுங்கில் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது.

முதலீட்டை ஈர்க்கும் திறன்

தொழில் முதலீட்டில் சர்வதேச அளவில் இந்தியா அனைத்து பெரு நிறுவனங்களின் கவனத்துக்கு உட்பட்ட நாடாக திகழ்கிறது. ஏனென்றால்,
இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையும், மற்ற தேசங்களுக்கு இந்தியா நீட்டும் நேசக் கரமும் மற்ற நாடுகளைக் கவர்வதாக உள்ளன. குறிப்பாக, பிரதமர் மோடியின் வெளிநாட்டு சுற்றுப் பயணங்கள் மூலம் மற்ற நாடுகளுடனான இந்தியாவின் நெருக்கம் கூடுவதால், தொழில் முதலீடுகளை இந்தியா மேலும் பெறுவதற்கு வழிவகை உருவாகிறது. அதற்கு சாதகமாக இந்தியாவில் இளைஞர்கள் சக்தி அதிகம் உள்ளது.

இந்த நிலையில் இந்தியாவில் உள்ள மாநிலங்களை, தொழில் முதலீட்டுக்கான 10 காரணிகளை வைத்து ‘ப்ராஸ்ட் அன்டு சல்லிவன்’ என்ற சர்வதேச ஆலோசனை நிறுவனம் கடந்த மார்ச் மாதம் வரிசைப்படுத்தியது. இதில், மிக முக்கிய முதல் காரணியான, ‘முதலீட்டை ஈர்க்கும் திறன்’-ல் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது. மற்ற காரணிகளை வரிசைப்படுத்தினால், அரசாங்கத்தின் செயல்திறன், சுகாதார கட்டமைப்பு, கல்வி ஆகிய அம்சங்களில் இரண்டாம் இடமும்; உள்கட்டமைப்பு, மின்னணு மயமாக்கல், வேலை வாய்ப்பு திறன் ஆகியவற்றில் 3-ம் இடத்தையும்; பொருளாதார வளத்தில் 4-ம் இடத்தையும் தமிழகம் பிடித்துள்ளது. இந்த 10 காரணிகளின்படி கணக்கிட்டால் இந்தியாவில் தமிழகம் 2-ம் இடத்தை பிடிப்பதாக அந்த சர்வதேச ஆலோசனை நிறுவனம் கணித்துள்ளது.

அன்னிய நேரடி முதலீட்டைபெற ஏக்கம்

வெளிநாடுகளில் இருந்து குவிக்கப்படும் முதலீடுகளை ஈர்ப்பதில் இந்திய மாநிலங்களுக்கு இடையே கடும் போட்டியும், ஏக்கமும் நிலவி வருகிறது.
இதற்கு ஒரு களமாக உலக முதலீட்டாளர் மாநாட்டை மாநிலங்கள் நடத்தி வருகின்றன. முன்னதாக நல்ல தொழில்வளமுள்ள நாடுகளுக்குச் சென்று அங்குள்ள தொழில் நிறுவனங்களை சந்தித்து, மாநில அரசு அதிகாரிகள் பேசுகின்றனர். முதலீட்டை மாநிலத்துக்கு கொண்டு வருவதில் இருக்கும் சலுகைகளைப் பற்றி எடுத்துரைத்து, ஒரு ஈர்ப்பை உருவாக்குகின்றனர்.

அன்னிய முதலீட்டைப் பெறுவதில் ஒரு மாநிலம் கடுமையாக உழைக்காவிட்டால் இதில் தோல்வியைத்தான் தழுவ வேண்டியதிருக்கும். அன்னிய முதலீட்டை கொண்டு வருவதற்கு முதலில் தேவைப்படுவது எளிமையான சட்டங்களும், சிக்கல் இல்லாத நடைமுறையும்தான். இதில் தெளிவான திட்டமிடல் இருந்தால் மட்டுமே வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீட்டை பெற முடியும். கடந்த 2000-ம் ஆண்டு ஏப்ரல் முதல் 2017-ம் ஆண்டு டிசம்பர் வரை, அன்னிய நேரடி முதலீட்டை பெற்ற மாநிலங்களை மத்திய தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டுத் துறை பட்டியலிட்டது. அதன்படி, மராட்டிய மாநிலம் ரூ.6.22 லட்சம் கோடி முதலீட்டைப் பெற்று முதலிடம் பிடித்தது. டெல்லி ரூ.4.11 லட்சம் கோடி; கர்நாடகா ரூ.1.65 லட்சம் கோடி அன்னிய நேரடி முதலீட்டைப் பெற்றன. தமிழகம் ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 123 கோடி ரூபாயை முதலீடாகப் பெற்று 4வது இடத்தில் இருக்கிறது. 2011-17-ம் ஆண்டுகளில் மட்டும் தமிழகம் ரூ.1.18 லட்சம் கோடி முதலீட்டை கூடுதலாக பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே ஒரு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி பெருமளவில் முதலீட்டை ஈர்த்துள்ள தமிழக அரசு அடுத்த உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டை சென்னையில் வருகிற 2019-ம் ஆண்டு ஜனவரி 23, 24-ந் தேதிகளில் நடத்துகிறது.

எளிமைப்படுத்தும் முயற்சி

ஒரு காலக்கட்டத்தில் ஓரிடத்தில் தொழில் தொடங்குவதற்கு பெரும்பாடுபட வேண்டியது இருந்தது. இடத்தை தேர்வு செய்து அதற்கு அனுமதி பெற்று, அந்த
இடத்தில் கட்டிடம் கட்டுவதற்கு அங்கீகாரம் பெற்று .... என்று பல்வேறு நடவடிக்கைகளுக்கு அரசு அலுவலகங்களுக்கு அலையாய் அலையும் நிலை இருந்தது. ஆனால் தொழில்களை ஊக்குவிப்பதற்காக, அதைத் தொடங்குவதற்கான நடைமுறையை எளிமைப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது.

அந்த வகையில் ஒற்றைச்சாளர தகவு என்ற மின்னணு முறையை தமிழக அரசு உருவாக்கியுள்ளது. அதை கடந்த 2017-ம் ஆண்டு நவம்பரில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். இதன் மூலம் அரசு அலுவலகங்களுக்கு அலையாய் அலைவது தவிர்க்கப்பட்டது.

மேலும், ஒற்றைச் சாளர தகவு மூலம் தொழில் தொடங்குவதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். அதோடு, சந்தேகம் ஏற்படும் இடங்களில் கேள்விகளை கேட்டு விடைகளை பெறலாம். அரசு கேட்கும் கட்டணங்களை செலுத்துவதோடு, விண்ணப்பங்களின் நிலையை அறிதல், அனுமதிகளை பெறுதல், குறைகள் இருந்தால் அதுபற்றி தெரிவித்தல் போன்ற வசதிகளை, அந்தந்த நிறுவனங்கள் அவர்களின் இருப்பிடத்தில் இருந்தே பெற்றுக்கொள்ள முடியும்.

எனவே முழுமையாக ஒரு பெருந் தொழிலை தொடங்குவதற்கு, இதுபோன்ற நடைமுறைகளை எளிமைப்படுத்துவது அவசியமாக உள்ளது. ஒற்றைச் சாளர தகவு, பல்வேறு நிறுவனங்களின் பாராட்டைப் பெற்றுள்ளதாக அரசுத் தரப்பில் கூறப்படுகிறது.

குறு, சிறு, நடுத்தர தொழிலில் வளர்ச்சி


தமிழகத்தில் குறு, சிறு, நடுத்தர தொழில்களை நம்பி பெரும்பாலான குடும்பங்கள் உள்ளன. இந்தத் தொழில்களில்தான் பெரும்பாலான இளைஞர்கள்
ஈடுபடுகின்றனர். தொழிற்சாலைகள், பெரும் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெறும் இளைஞர்களின் எண்ணிக்கைக்கு அடுத்தபடியாக, குறு, சிறு, நடுத்தர தொழில் முனைவோரின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு கடுமையான மின்சார பற்றாக்குறையால் இந்தத் தொழில்கள் கடுமையான நலிவைச் சந்தித்தன. முதலாளிகள் பலர் தொழிலாளிகள் ஆன நிலைகூட ஏற்பட்டது. ஆனாலும் கடந்த சில ஆண்டுகளில் இதிலுள்ள தொழில்முனைவோரின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது.

2011-12-ம் ஆண்டில் 70ஆயிரத்து639 ஆக இருந்த தொழில்முனைவோர் பதிவுகளின் எண்ணிக்கை, 2012-13-ம் ஆண்டில் 90,974; 2013-14-ம் ஆண்டில் ஒரு லட்சத்து16ஆயிரத்து 393; 2014-15-ம் ஆண்டில் ஒரு லட்சத்து 43ஆயிரத்து 104 என்று உயர்ந்து, இந்திய தர வரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் தமிழகம் நீடிக்கிறது. இந்தத் தகவலை குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் அமைச்சகம் வெளியிட்டுள்ளது. உற்பத்தித் துறையில் உள்ள சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களின் எண்ணிக்கை அடிப்படையிலான ஆய்வில், தமிழகம் 2 லட்சத்து 57 ஆயிரத்து 300 நிறுவனங்களைக் கொண்டு 3-ம் இடம் பிடித்துள்ளது. இதில் உத்தரபிரதேசம் 2.81 லட்சம், குஜராத் 2.71 லட்சம் நிறுவனங்களுடன் முதல் மற்றும் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளன.

தொழில் வளர்ச்சியில் தமிழகத்தின் நிலை

தமிழ்நாட்டைப் பற்றி மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஒரு கனவை வைத்திருந்தார். அதை தனது அரசியல் ரீதியிலான உரையில் தீர்க்கமாக குறிப்பிட்டு இருந்தார். “தமிழ்நாட்டை இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக உருவாக்கும் குறிக்கோளை நான் எடுத்துக்கொண்டேன். அமெரிக்கா குறித்து மிகப் பெரிய கனவைக் கொண்டிருந்த மார்ட்டின் லூதர் கிங்-கைப் போல தமிழ்நாட்டுக்கான கனவை நான் கொண்டிருக்கிறேன். அந்த எனது கனவில், தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்களில் வேலை இல்லாதவர்களே இருக்கக் கூடாது. வறுமை நிலை முற்றிலுமாக ஒழிக்கப்படும். அனைத்து மக்களும் அடிப்படை வசதிகளோடு, பாதுகாப்பு, அமைதி, வள வாழ்வு பெற்றிருக்க வேண்டும் என்பதே எனது கனவு” என்று பேசினார்.

ஜெயலலிதாவின் கனவை முன்னெடுத்துச் செல்வதில் தொழில்துறை முன்னேற்றம் கண்டிருக்கிறது என்பது உண்மைதான். ஒரு குடும்பத் தலைவனின் வருவாய் எந்த அளவுக்கு அந்தக் குடும்ப முன்னேற்றத்திற்கு முதுகெலும்பாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு ஒரு மாநிலத்தின் முன்னேற்றத்துக்கு தொழில்துறையின் பங்களிப்பு இன்றியமையாததாக உள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை வடமாநிலங்களான மராட்டியம், குஜராத், டெல்லி ஆகியவை தொழில்துறையில் தனிக்கவனம் செலுத்துகின்றன. தென்மாநிலங்களில் தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், கர்நாடகம் ஆகியவை முன்னிலை வகிக்கின்றன. எனவே தேச அளவில் இந்த மாநிலங்களுக்கு இடையே ஆரோக்கியமான போட்டி நிலவிக் கொண்டே இருக்கிறது. எந்த தொழிற்சாலைகள் புதிதாக வருகின்றன, எந்த தொழிற்சாலைகள் விரிவாக்கம் செய்ய இருக்கின்றன என்பதை இந்த மாநிலங்கள் உற்று கவனித்துக் கொண்டிருக்கின்றன.

மாநில அரசுகளுக்கு இடையேயான இதுபோன்ற போட்டிதான், தொழிற்சாலைகளை தொடங்குவதற்கான நடைமுறைச் சிக்கல்களை தவிர்க்கவும், இருக்கும் வழிமுறைகளை எளிதாக்கவும் செய்கிறது. நிலம், இடவசதி, உள்கட்டமைப்பு, மனிதவளம், பொது அமைதி போன்றவை ஒரு தொழிற்சாலை முழு திறனோடு அமைவதோடு, அந்தத் தொழிற்சாலை மேலும் வளர்ச்சி பெற உதவும் அடிப்படை அம்சங்களாக உள்ளன. இந்த அடிப்படை அம்சங்களை உன்னிப்பாக பராமரிக்கும் மாநிலங்கள், போட்டியில் ஜெயிக்கின்றன.



இந்த நிலையில் மத்திய அரசின் புள்ளியியல் அலுவலகம் கடந்த ஆண்டு ஒரு தகவலை வெளியிட்டது. அதன்படி, அதிக எண்ணிக்கையில் தொழிற்சாலைகளைக் கொண்ட மாநிலங்களில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது. முதல் 3 இடங்களை பார்க்கும்போது, தமிழகம் 37 ஆயிரத்து 331 தொழிற்சாலைகளைக் கொண்டு முதலிடம் பிடிக்கிறது. அதுமட்டுமல்லாமல், அந்த தொழிற்சாலைகளில் அதிகம் பேருக்கு (23.26 லட்சம்) வேலை வாய்ப்பு கிடைத்த மாநிலங்களிலும் தமிழகமே முதலிடம் பிடிப்பதாக மத்திய புள்ளியியல் அலுவலகம் ஆய்வு தெரிவிக்கிறது.

அடுத்தபடியாக, இரண்டாம், மூன்றாம் இடங்களில் முறையே, மராட்டியம் (28,210 தொழிற்சாலைகள், 19.70 லட்சம் வேலைவாய்ப்பு), குஜராத் (24,426 தொழிற்சாலைகள், 15.64 லட்சம் வேலைவாய்ப்பு) ஆகியவை வருகின்றன. இந்திய அளவில் காணப்படும் விகிதத்தை கணக்கிட்டால், தொழிற்சாலைகளின் எண்ணிக்கையில் 16.01 சதவீதமும், தொழிற்சாலைகளில் பணியமர்த்தப்பட்ட நபர்களின் எண்ணிக்கையில் 16.24 சதவீதமும் தமிழகத்தின் பங்களிப்பு உள்ளது. தொழிற்சாலைகளின் முதலீட்டு மூலதனத்தில் குஜராத், மராட்டிய மாநிலத்தை அடுத்து மூன்றாம் இடத்தில் தமிழகம் உள்ளது. இங்குள்ள முதலீட்டு மூலதனம் ரூ.3.50 லட்சம் கோடியாக உள்ளது. 

மேலும் செய்திகள்